செய்திகள்
அமைச்சர் மூர்த்தி

தமிழகத்தில் போலி பத்திரப்பதிவை தடுக்க சட்டத்திருத்தம்- சட்டசபையில் தாக்கல்

Published On 2021-09-02 09:38 GMT   |   Update On 2021-09-02 09:38 GMT
பத்திரப்பதிவில் மோசடி, பொய்யான ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டத்தை தடுப்பதற்காக பத்திரப்பதிவுக்கு முன்பு வில்லங்க சான்றிதழ், ஆவணங்களை சரிபார்ப்பது தொடர்பாக பல சுற்றறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் போலி பத்திர பதிவுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான சட்டமசோதாவை சட்டசபையில் இன்று அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்களின் மோசடி பதிவுகளை குறைப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த போதிலும் சில நபர்களால் பொய்யான விற்பனை ஆவணங்கள் மூலம் உண்மையான நில உரிமையாளர்களுக்கு மிகுந்த துன்பம் ஏற்படுகிறது என்றும் சொத்துக்களின் மீது வில்லங்கம் ஏற்படுகிறது என்றும் அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

பத்திரப்பதிவில் மோசடி, பொய்யான ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டத்தை தடுப்பதற்காக பத்திரப்பதிவுக்கு முன்பு வில்லங்க சான்றிதழ், ஆவணங்களை சரிபார்ப்பது தொடர்பாக பல சுற்றறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.

இப்படி முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் பொய்யான ஆவணங்களின் பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது. பின்னர் அதனை ரத்து செய்வதற்காக பாதிக்கப்பட்டவர்கள் அரசை அணுகுகின்றனர்.

1908-ம் ஆண்டு பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யும் அலுவலர் அல்லது பிற அதிகார அமைப்பால் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட ஆவணம் ஒன்றை மோசடி, ஆள்மாறாட்டம் போன்ற காரணத்திற்காக கூட ரத்து செய்வதற்கு அதிகாரம் இல்லாமல் உள்ளது.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதன்படி துன்பத்தை தணிப்பதற்காக பத்திரப்பதிவு சட்டத்தை மாநிலத்துக்கு பொருந்தும் வகையில் திருத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News