செய்திகள்
சென்னை ஐகோர்ட்

கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக அறநிலையத்துறை புதிய விதியை எதிர்த்து வழக்கு

Published On 2021-09-02 00:50 GMT   |   Update On 2021-09-02 00:50 GMT
அறநிலையத் துறையின் புதிய விதிகள் எங்கள் மரபுக்கு எதிராக உள்ளதால், அதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
சென்னை:

கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை புதிய பணி விதிகளை கொண்டுவந்துள்ளது. அதில், 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும், ஓராண்டு பயிற்சி முடித்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் விதிகள் உள்ளன.

இந்த விதிகளை எதிர்த்து பலர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் என்னும் இடத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் பரம்பரை பூசாரிகள் 8 பேர் ஐகோர்ட்டில் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், 8 குடும்பங்களிலும் மூத்தவர்கள் இறந்தால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆண், அடுத்த பூசாரியாக நியமிக்கப்படுவார். அறநிலையத் துறையின் புதிய விதிகள் எங்கள் மரபுக்கு எதிராக உள்ளதால், அதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், 4 வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டனர். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News