செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் மனைவி மரணம்: எடப்பாடி பழனிசாமி- அ.தி.மு.க.வினர் அஞ்சலி

Published On 2021-09-01 07:30 GMT   |   Update On 2021-09-01 07:30 GMT
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக கடந்த 22-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இன்று காலை விஜயலட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். என்றாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தற்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதில்
ஓ.பன்னீர்செல்வம்
பங்கேற்று வந்தார். தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்று மனைவியை அவர் பார்த்து வந்தார்.

இந்த நிலையில் தான் திடீரென விஜயலட்சுமி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்து இருக்கிறார். இது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்- விஜயலட்சுமி தம்பதிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன் ரவீந்திரநாத் எம்.பி.யாக உள்ளார்.

இன்னொரு மகன் ஜெயபிரதீப், மகள் பெயர் கவிதா. இவர்களும் தாய் மரணம் அடைந்ததையடுத்து கண்ணீர்விட்டு அழுதனர்.

ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மரணம் அடைந்த தகவல் அறிந்ததும், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, பி.கே.சேகர்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோரும் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.


மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்திவிட்டு வந்ததும் அவரை பார்த்து ஓ.பன்னீர்செல்வம் எழுந்து நின்றார். அவரது கண்கள் கலங்கின. இதையடுத்து மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை பிடித்து, முதுகை தட்டிக்கொடுத்து தைரியம் கூறினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தினார். தனது கைக்குட்டையால் கண்களை துடைத்தார்.

உடனே மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்தை தனது அருகில் உட்கார வைத்து ஆசுவாசப்படுத்தினார். அப்போது அமைச்சர் துரைமுருகன் ஓ.பன்னீர்செல்வத்தின் கைகளை பிடித்து ஆறுதல் கூறினார். அமைச்சர் தங்கம் தென்னரசு ஓ.பன்னீர்செல்வத்தை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார். அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் அவருக்கு ஆறுதல் கூறினார்.

அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத்குமாருக்கு மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் ஆறுதல் கூறினார்கள். சுமார் 10 நிமிடம் மு.க.ஸ்டாலின் அங்கேயே இருந்தார். அதன்பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று காலை பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு சென்று ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மரணம் அடைந்தது அவர்களுக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு சென்று விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

தேனி மாவட்டம் பெரிய குளம் மூன்றாந்தல் பகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு உள்ளது. விஜயலட்சுமி உடலை ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்களும், கட்சி தொண்டர்களும் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அந்த பகுதியே சோகமயமாக காட்சி அளித்தது.

இன்று மாலை பெரியகுளத்தில் உள்ள வீட்டில் விஜயலட்சுமிக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு பின்னர் அங்குள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இல்லத்துணையை பிரிந்து வாடும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருமான தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலட்சுமி மாரடைப்பால் உயிரிழந்த துயர செய்தி கேட்டு வருந்துகிறேன். துணைவியாரை இழந்து தவிக்கின்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ம.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறி உள்ளார்.


Tags:    

Similar News