செய்திகள்
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை

பல்வேறு மாவட்டங்களில் பம்பரமாக சுற்றிவரப்போகும் அண்ணாமலை- நாளை சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்

Published On 2021-08-31 05:47 GMT   |   Update On 2021-08-31 07:10 GMT
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சட்டமன்ற பா.ஜ.க. குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
தென்காசி:

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நாளை முதல் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் .

அவர் மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டம், பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல், கட்சி நிர்வாகிகள் வீட்டிற்கு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

முதற்கட்டமாக தென்காசி மாவட்டத்திற்கு நாளை வரும் அண்ணாமலை காலை 10 மணிக்கு பாவூர்சத்திரத்தில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்திலும், பிற்பகல் 12 மணிக்கு தென்காசியில் நடைபெறும் சமுதாய தலைவர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.

அதன்பின்னர் நெற்கட்டும் செவலில் புலித்தேவன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். மாலை 4 மணிக்கு சங்கரன் கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஆடிட்டோரியத்தில் மாணவ- மாணவிகளை சந்திக்கிறார்.

மாலை 7 மணிக்கு சங்கரன்கோவில் கிளை பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

மறுநாள்(2-ந்தேதி) காலை 10 மணிக்கு தூத்துக்குடி 3-ம் மைல் அருகில் நடைபெறும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

நண்பகல் 12 மணிக்கு தூத்துக்குடி நகரில் சமுதாய தலைவர்கள் சந்திப்பு கூட்டத்திலும், காமராஜர் கல்லூரியில் நடைபெறும் கல்லூரி மாணவர்களுடனான சந்திப்பு கூட்டத்திலும் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நெல்லை வரும் அண்ணாமலை வ.உ. சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.



நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சட்டமன்ற பா.ஜ.க. குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

தொடர்ந்து அண்ணாமலை விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

6-ந்தேதி தருமபுரியிலும், 11-ந்தேதி பரமக்குடியில் தியாகி இம்மானுவேல்சேகரன் பிறந்த நாள் விழாவிலும் கலந்து கொள்கிறார்.

14-ந்தேதி கள்ளக்குறிச்சியிலும், 15-ந்தேதி மயிலாடுதுறையிலும், 16-ந்தேதி விழுப்புரத்திலும், 17 மற்றும் 18-ந்தேதிகளில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

பின்னர் 19-ந்தேதி வடசென்னை கிழக்கு, 20-ந்தேதி திருவாரூர், 22-ந்தேதி மதுரை புறநகர், 24-ந்தேதி சென்னை மேற்கு, 26-ந்தேதி கன்னியாகுமரி, 27-ந்தேதி சிவகங்கை, 28-ந்தேதி திண்டுக்கல் மேற்கு மாவட்டம், 29-ந்தேதி கோவை தெற்கு என மாவட்டம் தோறும் செயல்வீரர்கள் கூட்டம், சமுதாய தலைவர்கள் சந்திப்பு என கூட்டங்கள் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News