செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் கிணற்றில் விழுந்த சிறுவன் - 2 நாட்களுக்கு பின் பிணமாக மீட்பு

Published On 2021-08-27 11:56 GMT   |   Update On 2021-08-27 11:56 GMT
கடந்த 25-ந்தேதி காலை அஸ்வின் அங்குள்ள கிணற்று அருகே விளையாடிகொண்டு இருந்தான். அப்போது திடீரென காணாமல் போய்விட்டான்.
திருப்பூர் :

திருப்பூர் போயம்பாளையம் பரணிகார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் அஸ்வின் (வயது 13). அரசு பள்ளியில் 9- ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 25-ந்தேதி காலை அஸ்வின் அங்குள்ள கிணற்று அருகே விளையாடி கொண்டு இருந்தான். அப்போது திடீரென காணாமல் போய்விட்டான். மகனை காணவில்லை என்று அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர்.

ஆனால் சிறுவனை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் தவறி அருகில் உள்ள கிணற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகித்து அங்கு தேடி பார்த்தனர்.

அப்போது கிணற்றின் அருகே சிறுவன் அணிந்திருந்த உடைகள் மட்டும் கிடந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கும், அனுப்பர்பாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. வடக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை தேடி பார்த்தனர்.

நீண்ட நேரம் தேடிப்பார்த்த பின்னரும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி சிறுவனை தேடினர். இந்த போராட்டத்தில் 2 நாட்களுக்கு பின்பு இன்று அதிகாலை 5 மணியளவில் அஸ்வினை பிணமாக கிணற்றில் இருந்து மீட்டனர்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News