செய்திகள்
ஐகோர்ட்டு

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-08-17 20:43 GMT   |   Update On 2021-08-17 20:43 GMT
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
மதுரை:

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென்தமிழகம் மற்றும் கேரள மாநில மக்கள் பெரும் பயன் அடைவார்கள். மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் மாணவர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் தற்போது கொரோனா தொற்று காரணமாக பல தனியார் மருத்துவமனைகளில் அளவுக்கு அதிகமாக பணம் வசூல் செய்கின்றனர். இந்த சூழலில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருந்தால் ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் குறைந்த செலவில் சிகிச்சை பெற்று பயனடைந்து இருப்பார்கள். ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு 2 வருடத்திற்கு மேல் ஆகியும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. எனவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.



இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய சமயத்தில்தான் பிற மாநிலங்களிலும் இதுபோன்ற எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டப்பட்டது. மற்ற இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு மட்டும் ஏன் இவ்வளவு தாமதம்?” என கேள்வி எழுப்பி இருந்தது.

கொரோனா ஊரடங்கை காரணம் காட்ட வேண்டாம். ஊரடங்கு சமயத்திலும் ஜப்பான் நிறுவனம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் பிறப்பித்தனர். அந்தத் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பணிகள் எதுவும் தொடங்கியதாக தெரியவில்லை. இந்த மருத்துவமனை அமைவதற்கான ஒவ்வொரு கட்ட நகர்வுக்கும் கோர்ட்டை நாடி, உத்தரவு பெறும் நிலைதான் உள்ளது என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். அவரது கருத்தை முக்கியமானதாக பார்க்கிறோம். எனவே எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கு முன்னுரிமை அளித்து 36 மாதங்களில் கட்டி முடிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்து முடிப்பார்கள் என இந்த கோர்ட்டு எதிர்பார்க்கிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Tags:    

Similar News