செய்திகள்
அவிநாசி அவிநாசிலிங்கேசுவரர் கோவில்.

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா

Published On 2021-08-16 10:14 GMT   |   Update On 2021-08-16 10:14 GMT
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கட்டுப்பாடுகளுடன் விழா நடைபெற்றது.
அவினாசி:

அவிநாசி அவிநாசிலிங்கேசுவரர் கோவிலுக்கு உட்பட்ட சுந்தரமூர்த்திநாயனார் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா  நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. 

அதிகாலை கணபதியாகம், 108 சங்காபிஷேகபூஜை, அபிஷேக அலங்காரம், மகாதீபாராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் செல்வவிநாயகர், பாதரிமரத்து அம்மன், அவிநாசியப்பர், சுப்பிரமணியம், கருணாம்பிகையம்மன், 63 நாயன்மார்களுக்கும் அபிஷேகம், அலங்காரம், மாகாதீபாராதனைகள் நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து தேவாரபாடல்கள், கூட்டு பாராயண வழிபாடுகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று வழிபாடு செய்தார். அப்போது அவர் கூறுகையில், 5 வயதாக இருக்கும் போதே சுந்தரர் குரு பூஜைக்காக கோவிலுக்கு பெற்றோருடன் வந்து செல்வேன். 

அவ்வாறு ஒரு முறை வரும் போது, சுந்தரர் தேவாரப்பதிகம் பாடி முதலையுண்ட பாலகனை உயிர்பித்து எழச்செய்த தாமரைக்குளத்தில் விழுந்து நீரில் மூழ்கினேன். அச்சமயத்தில் உடனடியாக முதியவர் ஒருவர் வந்து எனது உயிரை காப்பாற்றினர்.  இதையடுத்து பெற்றோர் மற்றும் கூடியிருந்த பக்தர்கள், பொதுமக்கள் முதியவருக்கு நன்றி தெரிவித்து, மீண்டும் சுந்தரரை வழிபட்டுச்சென்றோம். 

அன்று முதல் தொடர்ந்து இக்கோவிலுக்கு ஆண்டு தோறும் வந்து செல்கிறேன். விரைவில் இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News