செய்திகள்
பனை மரம்

பனை மரங்களை வெட்டுவதற்கு கடும் கட்டுப்பாடு - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

Published On 2021-08-14 07:35 GMT   |   Update On 2021-08-14 10:42 GMT
தமிழ்நாட்டில் பனை மரங்கள் வளரும் பரப்பளவு குறைந்து வருவதால் பனைமரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டமன்றத்தில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில் வேளாண்மை துறைக்கு தனியாக பட்ஜெட் தயாரித்து தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று வேளாண் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.

தமிழக அரசியல் வரலாற்றில் வேளாண்மை துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

பட்ஜெட் தயாரிக்கும் முன்பே வேளாண் பட்ஜெட் மிகச்சிறப்பாக அமைய வேண்டும். அதற்காக அதிகாரிகள் முழுகவனம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் என்பது தொலைநோக்கு திட்டத்துடன் உருவாக்கப்பட்டது. விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருவதால் விவசாய பரப்புகள் குறைந்து வந்தது. எனவே விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு எடுத்துள்ள சீரிய முயற்சியின் விளைவாக தனி பட்ஜெட் வந்திருக்கிறது.

இந்த பட்ஜெட்டை தயாரிப்பதற்காக உழவர் நல அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் விவசாயிகள், வேளாண் வணிகங்கள், வேளாண் துறை வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேளாண்மையில் மனிதர்கள் புரட்சி செய்துள்ளார்கள். வேட்டையாடி திரிந்த மனிதனை நாகரிகப்படுத்தியது வேளாண் புரட்சிதான் என்று குறிப்பிட்டார்.

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நிதி ஒதுக்கீடு, பயிர் காப்பீடு திட்டம், காய்கறி பயிரிட ஊக்கம் அளிப்பது, நவீன முறையில் பூச்சி மருந்து தெளிக்க 4 டிரோன்கள் வழங்குவது, இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.



நெல்லுக்கு ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு குவிண்டால் சன்னரக நெல்லுக்கு ரூ.70-ல் இருந்து 100 ஆகவும், சாதாரண ரகம் குவிண்டால் ரூ.50-ல் இருந்து 75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2060-ம், சாதாரண நெல் ரூ.2015-ம் ஆதார விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இளைய தலைமுறைக்கு கணினியை தெரிந்த அளவுக்கு கழனியை தெரியவில்லை. எனவே வேளாண் பட்டதாரிகளுக்கு விவசாயத்தை பற்றி பயிற்சி அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் பனை மரங்கள் வளரும் பரப்பளவு குறைந்து வருவதால் பனைமரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் விதைக்கப்படும். ஒரு லட்சம் பனங்கன்றுகளும் நடப்படும். ஏரிக்கரை, சாலையோரங்களில் மீண்டும் பனைமரங்கள் வளர்க்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பனை மரத்தினை, வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்தும் செயலினைத் தடுக்கவும் அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்ட நேரும் நிகழ்வுகளில் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும்.

பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பனை வளர்ப்பை ஊக்குவிக்க தனி இயக்கம் உருவாக்கப்படும்.


Tags:    

Similar News