செய்திகள்
கல்வெட்டினை திறந்து வைத்த அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ்.

வெள்ளை அறிக்கைக்கும் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கும் சம்மந்தம் இல்லை-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி

Published On 2021-08-11 08:29 GMT   |   Update On 2021-08-11 08:29 GMT
லஞ்ச ஒழிப்புத் துறையினர் தன் கடமையை செய்கிறார்கள். அ.தி.மு.க.வினர் மீது பெறப்படும் புகார்களுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்தில் உள்ள சாமளாபுரம் மற்றும் பள்ளபாளையத்தில் நீராதாரமாக விளங்கிவரும் சுமார் 160 ஏக்கர் குளங்கள் திருப்பூர் மேற்கு ரோட்டரி பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அந்த இரு குளங்களும் முறைப்படி அரசிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. 

மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சரவண மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அப்போது நிரூபர்களிடம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-
கடந்த 2006 ம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் நமக்கு நாமே திட்டம் அறிமுகப்படுத்தி பொதுமக்கள் பங்களிப்புடன் பல்வேறு நலத் திட்டங்களை செய்தார். பொதுமக்கள் பங்களிப்பு இருப்பதன் காரணமாக அவற்றை பராமரிக்கவும் அதில் அக்கறை காட்டவும் முன்வந்துள்ளனர்.

இதுபோன்று பொதுமக்கள் ஆர்வமாக ஈடுபட்டு திட்டங்களை நிறைவேற்றும் போது அந்த திட்டங்கள் பாதுகாக்கப்பட்டு பாராட்டுதலுக்கும் உரியதாகிறது. 
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெள்ளை அறிக்கையை வெற்று அறிக்கை என கூறியது தவறு. 

வெள்ளை அறிக்கையை முழுவதுமாக அவர் படிக்க வேண்டும். அரைகுறையாக படித்துவிட்டு விமர்சிக்க கூடாது.வெள்ளை அறிக்கைக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைக்கும் சம்பந்தமே இல்லை.

புகார்களின் அடிப்படையில் காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையினர் தன் கடமையை செய்கிறார்கள். அ.தி.மு.க.வினர் மீது பெறப்படும் புகார்களுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். 

சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்குமானால் நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்து அதன்மூலம் தீர்வு காணலாம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருளாதார வல்லுனர்களை கொண்ட குழுவை அமைத்து கடன் சுமையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார் என்றார்.
Tags:    

Similar News