செய்திகள்
கட்டிட வேலையில் ஈடுபட்டுவரும் ஆசிரியரும், தடகள பயிற்சியாளருமான சிவானந்தம்.

கொரோனாவால் வேலை, சம்பளம் இழப்பு கட்டிட தொழிலாளியாக மாறிய தடகள பயிற்சியாளர்-ஆசிரியர்கள்

Published On 2021-08-11 07:19 GMT   |   Update On 2021-08-11 07:19 GMT
உடல் உழைப்பையே பெரிதாக எண்ணிய சிவானந்தம் அதிகாலையில் தடகளப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு, அருகிலுள்ள பகுதிகளில் கட்டிடம் கட்டும் பணிக்கு சென்று விடுவார்.
திருப்பூர்:

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்தவர் சிவானந்தம்(வயது 43). திருப்பூர் காங்கயம் சாலை புதுப்பாளையத்தில் தனது மனைவி மற்றும் 2  மகள்களுடன் வசித்து வரும் இவர் தமிழில் எம்.பில்., படித்துள்ளார்.

தடகளத்தில் விரும்பி சேர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டதன் மூலம் பள்ளியில் படிக்கும்போது மாவட்டம் - மண்டல அளவில் தடகளத்தில் (தொலைதூர ஓட்டப்போட்டிகளில்) பங்கேற்று பரிசுகள் பல பெற்றிருக்கிறார். இவரின் விளையாட்டு திறமையை அங்கீகரித்த திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரி இவருக்கு விளையாட்டு பிரிவில் பி.ஏ., (தமிழ்) படிப்பில் சேர இலவசமாக இடம் கொடுத்தது.

இந்திய பல்கலைக்கழக அளவில் கேரளா, பஞ்சாப், கர்நாடகா மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக திருப்பூரில் குடியேறிய இவர் திருப்பூர் ஒன்றிய, வருவாய் மாவட்ட, மாநில அளவிலான தடகளப்போட்டிகளில் பங்கேற்றார்.

மூத்தோர்கள் தடகளப்போட்டியில் திருப்பூர் மாவட்ட அளவிலும், தமிழ்நாடு மாநில அளவிலும், இந்திய அளவிலும் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளார்.

தனியார் பள்ளிகள் சிலவற்றில் சிலவருடங்கள் தடகளப்பயிற்சியாளராக பணியாற்றியும் உள்ளார். உடல் உறுப்புகளின் செயல்பாடுகள், அவற்றை வலிமைப்படுத்துதல், நோயின்றி வாழ்தல் போன்றவற்றை வலியுறுத்தி “காய சம்பத்” எனும் புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் திருப்பூர் காங்கயம் சாலை நாச்சிபாளையத்திற்கு அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன் தமிழாசிரியராக பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். திடீரென்று வந்த கொரோனா கால ஊரடங்கு நேரத்தில் பணியிழப்பு ஏற்பட்டு குடும்பம் நடத்தவே மிகவும் சிரமப்பட்டு வருகிறார். 

உடல் உழைப்பையே பெரிதாக எண்ணிய சிவானந்தம் அதிகாலையில் தடகளப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு, அருகிலுள்ள பகுதிகளில் கட்டிடம் கட்டும் பணிக்கு சென்று விடுவார். இவர் போல இன்னும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கொரோனா கால வேலை இழப்பால்  எலக்ட்ரீசியன், ஆட்டோ ஓட்டுனர், பனியன் கம்பெனி உதவியாளர், காய்கறி விற்பவர் என பல்வேறு தொழில்களுக்கு சென்று விட்டதாகவும், அரசாங்கம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், சம்பள நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

அரசு பள்ளியின் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே படித்து விட்டு கஷ்டப்படும் ஆசிரியர்களின் வேண்டுகோளாக உள்ளது.
Tags:    

Similar News