செய்திகள்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடம்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்குவது எப்போது?- மத்திய அரசு அதிர்ச்சி பதில்

Published On 2021-08-11 04:03 GMT   |   Update On 2021-08-11 04:03 GMT
மதுரை எய்ம்சில் மருத்துவ மாணவர் சேர்க்கை, வகுப்புகளை தொடங்குவதற்கான முன்மொழிவு மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது.
மதுரை:

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 27.1.2019 அன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 45 மாதங்களில் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடிக்கல் நாட்டி 31 மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்ததால் சுற்றுச்சுவருடன் கட்டுமானப்பணி நின்று போனது.



இந்தநிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கான கடன் ஒப்பந்தமானது 26.3.21 அன்று இந்திய-ஜப்பான் அரசுகள் இடையே கையெழுத்தானது.

இதற்கிடையே, புதிய திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.1977.80 கோடி எனவும், அதில் ரூ.1627.70 கோடி ஜப்பானின் 'ஜெய்கா' நிறுவன கடன் வாயிலாகவும், மீதி தொகை பட்ஜெட் ஒதுக்கீடு வாயிலாகவும் ஈடு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதுபோல், முதலீட்டுக்கு முந்தைய பணிகள் எய்ம்ஸ் அமைவிடத்தில் 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, மதுரை எய்ம்ஸ் டெண்டர், மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கட்டுமான பணிகள் சம்பந்தமாக பல்வேறு தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மத்திய அரசிடம் கேட்டிருந்தார். அதற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளித்த பதில் வருமாறு:-

மதுரை எய்ம்ஸ் திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அது தவிர வேறு எந்த டெண்டரும் விடப்படவில்லை.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கும் தேதி தற்போது இல்லை. மதுரை எய்ம்ஸ் கட்டி முடிப்பதற்கான திருத்தப்பட்ட இலக்கு நிறைவு தேதி இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. எத்தனை கட்டங்களாக பணிகள் நடைபெறும் மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்ன கட்டிடங்கள் வரும் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. விரிவான திட்ட மதிப்பீடு பற்றிய தகவல்களும் இல்லை.

மதுரை எய்ம்சில் மருத்துவ மாணவர் சேர்க்கை, வகுப்புகளை தொடங்குவதற்கான முன்மொழிவு மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது. விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு்ள்ளது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணி பற்றிய அடுத்தடுத்த திட்டங்கள் இன்னும் நிறைவு செய்யப்படாததையே மத்திய அரசு அளித்துள்ள இந்த பதில் காட்டுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே இனியும் தாமதிக்காமல் பணியை தொடங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தென்மாவட்ட மக்களிடையே வலுத்து வருகிறது. அதே நேரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனே தொடங்கவும், தற்காலிக கட்டிடங்களை தேர்வு செய்து புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்கவும் வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News