செய்திகள்
பள்ளி வகுப்பறை

மாணவர்களே தயாராக இருங்கள்... தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தேசம்

Published On 2021-08-06 14:05 GMT   |   Update On 2021-08-06 14:05 GMT
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16ம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
சென்னை:

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பள்ளிகள் திறப்பு குறித்த தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.



மேலும் இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலும் பிள்ளைகளுக்கு கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

அனைத்து தரப்பு கருத்துக்களையும் ஆய்ந்து அதன் அடிப்படையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக் கல்வித்துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16ம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும். இம்மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பணியாளர் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
Tags:    

Similar News