செய்திகள்
கோப்புபடம்

மதுரையில் ஒருவழிப்பாதையில் சென்றவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த போலீசார்

Published On 2021-08-06 12:44 GMT   |   Update On 2021-08-06 12:44 GMT
மதுரையில் ஒருவழிப்பாதையில் சென்றவருக்கு போலீசார் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை:

மதுரை பெத்தானியாபுரம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஜீவன்ராஜ் (வயது 32). இவர் கடந்த ஜனவரி மாதம் மோட்டார் சைக்கிளில் பெரியார் பஸ் நிலைய சிக்னல் பகுதிக்கு சென்றார். அவர் ஒரு வழிப்பாதையில் சென்றதாக தெரிகிறது.

அங்கு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பனராஜ், ஜீவன் ராஜை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தார். அப்போது ஜீவன்ராஜ் அவசர வேலையாக செல்வதால் ஒரு வழிப்பாதையில் வந்ததாக கூறினார். இதையடுத்து அவரை போலீசார் மோட்டார் சைக்கிளுடன் விடுவித்தனர்.

இந்த நிலையில் ஜீவன் ராஜ் சமீபத்தில் மருத்துவ விற்பனை பிரதிநிதியாக வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த பழைய மோட்டார் சைக்கிளை விற்பனைக்காக எடுத்துச் சென்றார்.

அந்த வாகனத்தை வாங்க விரும்பியவர் அதற்கான ஆவணம் மற்றும் சான்றிதழ்களை ஆய்வு செய்தார். அப்போது ஜீவன்ராஜ், போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அவருக்கு ரூ.25 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அந்த நபர் ஜீவன் ராஜிடம் விவரத்தை தெரிவித்தார்.

ஜீவன் ராஜ் கூறுகையில், சம்பவத்தன்று நான் பெரியார் பஸ் நிலைய ஒரு வழிப்பாதையில் தெரியாமல் சென்றதற்காக போலீசார் என்னை விடுவித்து விட்டனர். நான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், 12 ஆண்டுகளுக்கும் முந்தையது. எனவே அதனை விற்பதற்காக கொண்டு சென்றேன். அப்போதுதான் எனக்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.25 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.

இத்தனைக்கும் நான் போக்குவரத்து ஆவணங்கள் அனைத்தையும் கைவசம் வைத்திருந்தேன். ஒரு வழிப்பாதையில் சென்றதாக போலீசார் அபராதம் விதித்து இருந்தால் கூட அது 100 ரூபாய்க்குள் தான் வந்து இருக்கும். ஆனால் இவ்வளவு பெரிய தொகை எப்படி எனக்கு அபராதமாக விதிக்கப்பட்டது? என்பது தெரியவில்லை என்றார்.

இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா கூறுகையில், போக்குவரத்து விதிமீறலுக்கு எதிரான சட்டங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.25 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் நான் இதுகுறித்து விசாரிக்கிறேன் என்றார்.

Tags:    

Similar News