செய்திகள்
பாலாற்றில் தோல் கழிவு பொருட்களை கொட்டி தீவைத்து எரிப்பதை படத்தில் காணலாம்

தோல் கழிவு பொருட்களை கொட்டி தீ வைத்து எரிக்கும் அவலம் - கலெக்டருக்கு புகார் மனு

Published On 2021-08-06 12:09 GMT   |   Update On 2021-08-06 12:09 GMT
வாணியம்பாடி பாலாற்றங்கரையோரம் தோல் தொழிற்சாலை ரசாயனக் கழிவுப் பொருட்களை கொட்டி தீ வைத்து எரிக்கும் அவலம் நடந்து வருகிறது. நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் புகார் மனு அனுப்பி உள்ளனர்.
வாணியம்பாடி:

வாணியம்பாடி பகுதியில் பிரதான தொழிலாக தோல் தொழில் இருந்து வருகிறது. அங்கு 300 தோல் தொழிற்சாலைகள் உள்ளன. அதில் தற்போது 200 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அந்தத் தொழிற்சாலைகளில் ஆடு, மாடு ஆகிய தோல்களில் இருந்து ரசாயனங்கள் மூலமாக நீக்கப்படும் ரோமங்களை மூட்டை மூட்டையாகக் கட்டி வாகனத்தில் எடுத்துச் சென்று, அங்குள்ள பாலாற்றங்கரையோரம் கொட்டி தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், சுவாச கோளாறு பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறுகிறார்கள்.

ரசாயனம் கலந்த, எதற்கும் உதவாத ரோமங்களை வாகனங்கள் மூலம் கொண்டு வந்து அங்குள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் மிகப் பெரிய பள்ளம் தோண்டி, அதில் கொட்டுவதாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் பாலாற்றங்கரையில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. மேலும் கிணற்றுத் தண்ணீரை மனிதர்களோ, கால்நடைகளோ குடிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது.

இந்தநிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு வாணியம்பாடி பகுதி, மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறிவிடும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். தொழிற்சாலை நிர்வாகத்தினர் தோல் கழிவுகளை கொண்டு வந்து பாலாற்றங்கரையில் கொட்டுவதை, தீ வைத்து எரிப்பதைத் தடுக்க வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டுத்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

சமீபத்தில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்டம் முழுவதும் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை எந்த இடத்திலும் தீயிட்டு கொளுத்தக்கூடாது, என உத்தரவிட்டுள்ளார். ஆனால் வாணியம்பாடி பகுதியில் தோல் தொழிற்சாலையின் பின்பக்கம் உள்ள பாலாற்றங்கரையோரத்தில் சர்வ சாதாரணமாக தோல் தொழிற்சாலை ரசாயனக் கழிவுப் பொருட்களை மூட்டைகளில் கட்டி எடுத்து வந்து தீயிட்டுக் கொளுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு விதிமுறைகள் மீறி செயல்படும் சம்பந்தப்பட்ட தோல் தொழிற்சாலை நிர்வாகத்தினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீர், காற்று மாசுபடாமல் காக்க வேண்டும் என வாணியம்பாடியில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News