செய்திகள்
மக்களை தேடி மருத்துவம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2021-08-06 11:20 GMT   |   Update On 2021-08-06 11:20 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா ஒரு மருத்துவக் குழு வீதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், வழுதூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவ திட்ட தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்திரகலா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்) கருமாணிக்கம் (திருவாடானை), கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலெக்டர் பேசுகையில், இந்த திட்டம் தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதோடு, அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கிடும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மருத்துவம் செய்திடவும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலசிஸ் செய்ய வேண்டியவர்களுக்கு நடமாடும் டயலிசிஸ் எந்திரம், இலவச டயாலிசிஸ் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா ஒரு மருத்துவக் குழு வீதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, மண்டபம், திருப்புல்லானி, பரமக்குடி, சாயல்குடி ஆகிய 4 வட்டாரங்களில் மருத்துவக் குழு அலுவலர்களுக்கான வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

விழாவில் சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் பொற்கொடி, தொழுநோய் பிரிவு ரவிச்சந்திரன், மண்டபம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News