செய்திகள்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்த காட்சி.

திருப்பூரில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Published On 2021-08-05 10:38 GMT   |   Update On 2021-08-05 10:38 GMT
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள போதிலும் தமிழகத்தில் வெகுவாக தொற்று குறைந்துள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் தெக்கலூர் துணை சுகாதார நிலையத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை கலெக்டர் வினீத் தலைமையில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக அவினாசி வட்டம் சேவூர், அவினாசி, நம்பியாம்பாளையம், துலுக்கமுத்தூர், திருமுருகன்பூண்டி ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 25 துணை சுகாதார நிலையங்கள் சார்ந்த கிராமங்களின் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

பின்னர் படிப்படியாக மாவட்டத்தில் உள்ள ஏனைய பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து 100க்கு கீழ் வந்துள்ளது.    

விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் தேவையான அளவிற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அருகாமையிலுள்ள கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள போதிலும் தமிழகத்தில் வெகுவாக தொற்று குறைந்துள்ளது. அனைவரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். 

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அவிநாசி வட்டாரத்தில் முதற்கட்டமாக 3,192 பயனாளிகள் பயன்பெறவுள்ளனர். இந்த திட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வீட்டிற்கே சென்று சுகாதார பெண் களப்பணியாளர்கள் மூலம் இரண்டு மாதங்களுக்கு தேவையான மாத்திரைகள் கொடுக்கப்படவுள்ளன. 

மேலும் படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சையாளர் மூலம் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார், அவிநாசி வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News