செய்திகள்
கோப்புபடம்

வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்-மீண்டும் இயக்கத்தை தொடங்கிய பவர்டேபிள் நிறுவனங்கள்

Published On 2021-08-03 12:02 GMT   |   Update On 2021-08-03 12:02 GMT
கட்டண உயர்வு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பவர் டேபிள் நிறுவனத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
திருப்பூர்:

திருப்பூரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பவர் டேபிள் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் திருப்பூரில் இயங்கி வரும் உள்நாட்டு  பனியன் உற்பத்தி நிறுவனங்களுக்கு பனியன் உள்ளிட்ட ஆடைகள் தைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கட்டண ஒப்பந்தம் மூலம் பனியன் நிறுவனங்களுக்கு பவர்டேபிள் நிறுவனங்கள் சார்பில் ஆடைகள் தைத்து கொடுக்கப்படுகிறது. 

இந்தநிலையில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) - ,திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர் சங்கங்கள் இணைந்து கடந்த 2016-ல் மேற்கொண்ட  கட்டண ஒப்பந்தம் கடந்த 2020 அக்டோபரில் முடிவடைந்தது. கொரோனாவால் புதிய ஒப்பந்தம் தாமதமானது.

உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தி உடனடியாக ‘ஜாப்ஒர்க்‘ கட்டணத்தை உயர்த்தி வழங்கவேண்டுமென பவர்டேபிள் உரிமையாளர் சங்கம்  சைமாவுக்கு கடிதம் அனுப்பியது. ‘சைமா’ சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் பவர்டேபிள் நிறுவனங்கள் காலவரையற்ற உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாளொன்றுக்கு  ரூ.5கோடி  மதிப்பிலான உள்நாட்டு ஆடை உற்பத்தி முடங்கியுள்ளது. 

இதற்கிடையே நேற்று சைமா சங்க அலுவலகத்தில் பவர் டேபிள் உரிமையாளர்கள் மற்றும் சைமா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு சைமா சங்க தலைவர் வைக்கிங் ஏ.சி. ஈஸ்வரன் தலைமை தாங்கினார். 

பொதுச்செயலாளர் எம்பெரர் பொன்னுச்சாமி, துணைத்தலைவர் கோவிந்தப்பன் மற்றும் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜ், செயலாளர் நந்தகோபால், துணைச்செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கட்டண உயர்வு மற்றும் சம்பள ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இந்த பேச்சுவார்த்தையில் பவர் டேபிள் உரிமையாளர்களின் நிலையை கருத்தில் கொண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, போக்குவரத்து செலவு, நூல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களினால் பவர் டேபிள் உரிமையாளர்களுக்கு ஒரு டஜன் ஆடைகளுக்கு 12 பீஸ் கட்டணம் ரூ.6 தற்காலிகமாக உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 

கட்டண உயர்வு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பவர் டேபிள் நிறுவனத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதையடுத்து இன்று முதல் உள்நாட்டு பனியன் நிறுவனங்களுக்கு ஆடை தைத்து கொடுக்கும் பணியை தொடங்கினர். 
Tags:    

Similar News