செய்திகள்
கோப்புப்படம்

மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது

Published On 2021-08-03 11:29 GMT   |   Update On 2021-08-03 11:29 GMT
கோவாக்சின் தடுப்பூசிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பு இருப்பதால் தினமும் குறைந்த எண்ணிக்கை டோஸ்கள் முகாம்களுக்கு அனுப்பப்படுகிறது.
மதுரை:

மனித உயிர்களை காவு வாங்கும் கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் தடுக்க தடுப்பூசிதான் ஒரே தீர்வு என்ற வகையில் நாடு முழுவதும் பொது மக்களிடம் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு தீவிரமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி தினமும் சிறப்பு முகாம்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 வகை தடுப்பூசிகள் பொது மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதமாக கோவாக்சின் தடுப்பூசிக்கு தமிழகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதன் காரணமாக ஏற்கனவே முதல் டோஸ் போட்டவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கோவாக்சின் தடுப்பூசிகள் குறைந்த எண்ணிக்கையில் கையிருப்பு காரணமாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசிகள் அனைத்து முகாம்களிலும் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. ஆனால் கோவாக்சின் தடுப்பூசிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பு இருப்பதால் தினமும் குறைந்த எண்ணிக்கை டோஸ்கள் முகாம்களுக்கு அனுப்பப்படுகிறது.

இதனை 2-வது டோஸ் செலுத்துபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

தட்டுப்பாடு காரணமாக கோவாக்சின் முதல் டோஸ் போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சிலர் கோவாக்சின் தடுப்பூசிகளுக்காக காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோவாக்சின் தடுப்பூசிகள் 2-வது டோஸ் மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சுமார் 15 ஆயிரம் பேர் வரை 2-வது டோஸ் செலுத்துவதற்கு காத்திருக்கிறார்கள்.

எனவே முதல் டோஸ் செலுத்த வரும் பொது மக்களுக்கு சுகாதாரப் பணியாளர்கள் கோவிஷில்டு தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும்படி ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்.

கோவாக்சின் தடுப்பூசிகள் குறைந்த எண்ணிக்கையில் கையிருப்பு உள்ளதால் சில மணி நேரங்களிலேயே தீர்ந்து விடுகிறது.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டி உள்ளது.18 வயதுக்கு மேற்பட்ட மேற்பட்டோர் மற்றும் முன்னுரிமை உடையவர்கள் உள்ளிட்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளதாகவும், அதில் 2 டோஸ்களும் செலுத்தியவர்கள் 15 சதவீதம் பேர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா 3-வது அலை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் அனைவரும் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே தடுப்பூசி முகாம்களில் தினமும் ஏராளமானோர் காத்திருந்து தடுப்பூசிகளை செலுத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News