செய்திகள்
கொள்ளை

தக்கலை அருகே ஆசிரியை வீட்டில் 75 பவுன் நகை- ரூ.2 லட்சம் கொள்ளை

Published On 2021-08-03 08:30 GMT   |   Update On 2021-08-03 08:30 GMT
தக்கலை அருகே ஆசிரியை வீட்டில் 75 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை:

தக்கலை அருகே முத்தலக்குறிச்சியை சேர்ந்தவர் வில்சன். அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி கிரைஸ்மேரி (வயது 57). இவர் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேற்குடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியை வேலை பார்த்து வருகிறார்.

கொரோனா பரவலை அடுத்து பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்ததால் கிரைஸ்மேரி ஊரில் தங்கி இருந்தார். தற்போது ஆசிரியைகள் பள்ளிக்கு வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிரைஸ்மேரி புதுக்கோட்டைக்கு புறப் பட்டு சென்றார். இந்த நிலையில் இன்று காலை கிரைஸ்மேரியின் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கிரைஸ்மேரி வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன் வீட்டில் இருந்த பீரோ மற்றும் மேஜையும் உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. கணேசன், இன்ஸ்பெக்டர் சுதேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது பீரோவில் இருந்த 75 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

கிரைஸ்மேரி கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றதை நோட்டமிட்டே மர்மநபர் கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News