செய்திகள்
ஆடுகள், சேவல்களின் இறைச்சியை மண்பானைகளில் சமைக்கும் பணி நடந்த போது எடுத்த படம்.

ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கோவில் விழா: 100 ஆடு, 600 சேவல்களை பலியிட்டு படையல்

Published On 2021-08-03 01:47 GMT   |   Update On 2021-08-03 01:47 GMT
கோவில் விழாவில் 100 ஆடுகள், 600 சேவல்களை பலியிட்டு உப்பு, வேப்பிலையை பயன்படுத்தி சமைத்து படைத்தனர். இதற்கான பூஜையில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
மதுரை :

மதுரை மாவட்டம் வீரசூடாமணிபட்டி, சுந்தர்ராஜபுரம், கச்சிராயன்பட்டி ஆகிய 3 கிராமங்களுக்கு சொந்தமான ஐந்துமுளி சுவாமி கோவிலில் கல்லுபடையல் விழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி பொதுமக்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடனாக வெட்டிருந்த 100 ஆடுகள் மற்றும் 600 சேவல்கள் கோவில் அருகே பலியிடப்பட்டன.

பின்னர் 3 கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு, பலியிடப்பட்ட ஆடுகள், சேவல்களை சுத்தம் செய்து, பின்னர் வரிசையாக வைத்திருந்த அடுப்பில் மண் பானைகளில் சமைத்தனர். இந்த இறைச்சி சமையலுக்கு உப்பு, வேப்பிலைகளை மட்டுமே பயன்படுத்தினர். அதை தொடர்ந்து, கோவிலின் முன்பு சுவாமிக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்தனர்.

படையல் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை அதாவது சர்க்கரை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

படையல் பூஜை முடிந்த பின்னர்தான் பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் விருந்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். உப்பு, வேப்ப இலைகளால் மட்டுமே சமைக்கப்பட்ட இறைச்சி பரிமாறப்பட்டது.
Tags:    

Similar News