செய்திகள்
கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்த ஜனாதிபதி

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா- கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

Published On 2021-08-02 11:55 GMT   |   Update On 2021-08-02 18:21 GMT
சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத்திறப்பு விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது.
சென்னை:

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்புவிழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார். இதன்மூலம் சட்டசபையில் 16வது தலைவராக கருணாநிதியின் படம் இடம்பெற்றுள்ளது. விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சட்டசபை வளாகம் புதுப்பிக்கப்பட்டிருந்தது. சட்டசபையின் வெளிப்புறமும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. சட்டசபையை சுற்றியுள்ள சாலைகளும் புதிதாக போடப்பட்டுள்ளன. சட்டசபை நுழைவு வாயிலில் வாழைத்தோரணங்கள் கட்டப்பட்டு அந்த வளாகமே விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது.



சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி டெல்லியில் இருந்து விமான நிலையம் வந்து, அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக
சட்டசபை
விழா அரங்குக்கு வந்து விழாவில் பங்கேற்றார். அவர் வந்த வழிநெடுகிலும் 10 அடிக்கு ஒரு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். ஜனாதிபதியின் பாதுகாப்பு பணியில் கமாண்டோ படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News