செய்திகள்
கோப்புபடம்

நூதன முறையில் பனியன் உற்பத்தியாளர்களிடம் பண மோசடி

Published On 2021-08-02 11:36 GMT   |   Update On 2021-08-02 11:36 GMT
ஆடைகள் கைக்கு வந்த உடனேயே அந்த கும்பல் அதனை விற்று காசு பார்த்துவிட்டு இடத்தை காலிசெய்துவிடுகிறது.
திருப்பூர்:

திருப்பூரில் கடந்த சில நாட்களாக ஒரு கும்பல் குறு, சிறு பனியன் உற்பத்தியாளரை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுவருகிறது.அந்த கும்பல் முதலில், உற்பத்தியாளர்களிடமிருந்து குறைந்த மதிப்பில் ஆடை வாங்குகிறது. அதற்கான தொகையை அடுத்த ஓரிரு நாட்களில் சரியாக வழங்கிவிடுகிறது. ஆடை உற்பத்தியாளர்களும் மோசடி ஆசாமிகள் மீது முழு நம்பிக்கை வைத்துவிடுகின்றனர்.

இதை சாதகமாக பயன்படுத்தி அடுத்தகட்டமாக பல லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடைகளை கொள்முதல் செய்கின்றனர். குறித்த நாளில் தொகை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் உற்பத்தியாளர்களும் ஆடைகளை வழங்கிவிடுகின்றனர். ஆடைகள் கைக்கு வந்த உடனேயே அந்த கும்பல் அதனை விற்று காசு பார்த்துவிட்டு இடத்தை காலிசெய்துவிடுகிறது.

ஆடைக்கான தொகையை உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்குவதில்லை. குறு, சிறு ஆடை உற்பத்தியாளர் ஏராளமானோர் இந்த மோசடி கும்பலின் வலையில் சிக்கி பல லட்சங்களை இழந்துள்ளனர். இதுகுறித்து மோசடி கும்பலிடம் ஏமாந்த ஆடை உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் நானும், என்னுடன் சேர்ந்து 7 உற்பத்தியாளர்கள் அந்த கும்பலுக்கு மொத்தம் ரூ.15லட்சம் மதிப்பிலான ஆடைகளை வழங்கி ஏமாந்துள்ளோம்.

ஆடைகளை இரவு நேரங்களில் தங்கள் குடோனில் கொண்டு சேர்க்க  சொல்கின்றனர். தொகையை  காலையில் தருவதாக கூறுகின்றனர். ஆனால், தொகையும் வழங்காமல் குடோனையும் காலி செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடிவதில்லை.

அடுத்தடுத்து புதியவர்களை அனுப்பிவைத்து வெவ்வேறு நிறுவனங்களில் ஆடைகளை கொள்முதல் செய்து பல லட்சங்களை ஏமாற்றி விடுகின்றனர். ஆடை உற்பத்தியாளர் யாரும் இந்த கும்பலிடம் சிக்கிக்கொள்ளாதீர்.இவ்வாறு அவர் கூறினார். எனவே மோசடி கும்பல் யாரென்று கண்டறிந்து அவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசாரை பின்னலாடை உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News