செய்திகள்
நகை கொள்ளை

திருமங்கலத்தில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் நகை கொள்ளை

Published On 2021-08-02 03:15 GMT   |   Update On 2021-08-02 03:15 GMT
திருமங்கலம் பகுதியில் சமீப காலமாக இருசக்கர வாகனம் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருமங்கலம்:

திருமங்கலம் சண்முகநகர் 1-வது தெரு பகுதியை சேர்ந்தவர் டிராவல்ஸ் அதிபர் சுரேஷ். இவர் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் சொந்த ஊரான பெருங்காமநல்லூர் சென்றுள்ளார். இரவு 8 மணி வரை இருந்து விட்டு அதன் பின்பு சொந்த ஊருக்கு சென்று உள்ளனர். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் பூட்டி இருந்த வீட்டின் கதவுகளை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அத்துடன் குழந்தைகள் சேர்த்து வைத்த ரூ.8 ஆயிரத்தையும் எடுத்து சென்றனர். இந்தநிலையில் சுரேஷ் நேற்று ஊரில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோதினி மற்றும் திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அருகில் இருந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ராஜசேகர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அங்கு பீரோ, அலமாரி உள்ளிட்டவைகளை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்து உள்ளனர். ஆனால் வீட்டில் பணமோ, நகையோ இல்லாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒரு மதுபாட்டிலை எடுத்துச் சென்றனர்.

திருமங்கலம் பகுதியில் சமீப காலமாக இருசக்கர வாகனம் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News