செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா -ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை

Published On 2021-08-01 23:07 GMT   |   Update On 2021-08-02 07:03 GMT
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு விழா நடக்கும் தலைமை செயலக வளாகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா இன்று மாலை 5 மணியளவில் நடக்கிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார்.
 
இதற்காக அவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணியளவில் சென்னை வருகிறார். பின்னர் கிண்டி கவர்னர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து மாலை 4.35 மணியளவில் புறப்பட்டு சாலை மார்க்கமாக சட்டசபை விழா அரங்குக்கு மாலை 5 மணிக்கு வருகை தர உள்ளார்.



ஜனாதிபதி வருகையையொட்டி சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விமான நிலையம் வந்தவுடன் ஜனாதிபதி, கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சட்டசபை விழா அரங்குக்கு வருகிறார்.

அவர் செல்லும் வழிநெடுகிலும் 10 அடிக்கு ஒரு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். ஜனாதிபதி பாதுகாப்புக்காக கமாண்டோ படை வீரர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம், கவர்னர் மாளிகையில் உயர் அதிகாரிகள் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். 

மேலும் கண்காணிப்பு கேமராக்களும் புதிதாக பொருத்தப்பட்டு உள்ளன. இதுதவிர டிரோன் கேமராக்கள் மூலமாகவும் பாதுகாப்பு பணிகளை போலீசார் ஆய்வு செய்கிறார்கள்.
Tags:    

Similar News