செய்திகள்
சாலை மறியல்

திருவையாறு அருகே பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

Published On 2021-08-01 10:33 GMT   |   Update On 2021-08-01 10:33 GMT
விவசாயிகள் 50 பேருக்கு மேல் பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீர் திறந்துவிட அரசு அலுவலர்களிடம் வலியுறுத்திக் கோரும் விதமாக விளாங்குடியிலுள்ள அரியலூர் மெயின்ரோட்டில் சாலைமறியல் செய்தனர்.

திருவையாறு:

கல்லணையிலிருந்து வரும் காவிரி ஆற்றின் கிளைக் கால்வாயாகப் பிரிந்து சுமார் 10ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு பாசனநீர் பாயும் அளவுக்கு ஆச்சனூர் தலைமதகிலிருந்து வைத்தியநாதன்பேட்டை, ஆற்காடு, மேலப்புனல்வாசல், விளாங்குடி மற்றும் அணைக்குடி ஆகிய கொள்ளிடக் கரையோர கிராமங்களின் வழியாக ஆனந்தக் காவேரி எனும் பாசன வாய்க்கால் செல்கிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு பாசன நீர் தேவைக்காக கல்லணையும் திறக்கப்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவையாறு வட்டாரப் பகுதியில் ஓடும் காவிரி ஆற்றில் பாசனத்திற்குப் போதுமான அளவு தண்ணீர் திறந்து விடப்படாடாததால் விவசாயப் பணிகளைத் தொடர்ந்து செய்ய முடியாமலும் நடவு செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் இல்லாமல் நாற்றுகள் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மேலப் புனல்வாசல் கிராமப் பகுதியில் பாசன வாய்க்காலில் போதிய அளவு தண்ணீர் திறந்துவிடப் படாததால் சுமார் 700 ஏக்கர் நிலங்களில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் 50 பேருக்கு மேல் பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீர் திறந்துவிட அரசு அலுவலர்களிடம் வலியுறுத்திக் கோரும் விதமாக விளாங்குடியிலுள்ள அரியலூர் மெயின்ரோட்டில் சாலைமறியல் செய்தனர்.

தகவலறிந்த திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், டி.எஸ்.பி. ராஜ்மோகன், காவேரி வடிகால் பிரிவு உதவிப் பொறியாளர் யோகேஸ்வரன், வருவாய் ஆய்வாளர்கள் சாந்தி, சந்துரு, கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது நாளைமுதல் புனல்வாசல் பாசன வாய்க்காலில் விவசாயத்திற்குப் போதுமான அளவு தண்ணீர் திறந்துவிடப்படும் அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News