செய்திகள்
தடையை மீறி ஏரியில் மீன் பிடித்த கிராம மக்களை படத்தில் காணலாம்.

ஊரடங்கு உத்தரவை மீறி ஏரியில் மீன் பிடிக்க திரண்ட 20 கிராம மக்கள்

Published On 2021-08-01 09:28 GMT   |   Update On 2021-08-01 09:28 GMT
கண்டாச்சிமங்கலம், நாகலூர், பொரசக்குறிச்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் நாகலூர் பெரிய ஏரியில் மீன்பிடிக்க திரண்டனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே நாகலூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி மீன்பிடிக்க ஒன்று திரண்டனர்.

இதையொட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை கொரோனா ஊரடங்கு உத்தரவு காலகட்டத்தில் மீன்பிடிக்க கூடாது என கூறி திருப்பி அனுப்பினர்.

இன்று வேளாக்குறிச்சி, வரஞ்சரம், கண்டாச்சிமங்கலம், நாகலூர், பொரசக்குறிச்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் நாகலூர் பெரிய ஏரியில் மீன்பிடிக்க திரண்டனர்.

தகவலறிந்த வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் பொதுமக்கள் அனைவரும் ஏரியில் இறங்கி மீன் பிடிக்கத் தொடங்கினர். இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

இதுகுறித்து மீன்பிடித்தவர் ஒருவர் கூறுகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், ஏரியில் தண்ணீர் குறைந்து உள்ளதாலும் பொதுமக்கள் வலைகளை வீசி இன்று மீன் பிடித்தனர்.

ஏரியில் கெண்டை, கெளுத்தி, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்ததாகவும், கெண்டை ஒரு கிலோ முதல் 4 கிலோ வரை இருந்தததாக தெரிவித்தனர். மீன்பிடி திருவிழாவில் சுமார் 2,000 கிலோ மீன் பிடிக்கப்பட்டு இருக்கலாம் எனவும். மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் மீன் கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் மீன் பிடித்துச் சென்றனர் என கூறினார்.

இந்நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முக கவசம் அணியாமலும் பொதுமக்கள் ஒரே நேரத்தில் 500 -க்கும் மேற்பட்டோர் ஏரியில் இறங்கி மீன் பிடித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News