செய்திகள்
குட்கா மூட்டைகளை உதவி கமி‌ஷனர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் பார்வையிட்ட காட்சி

சேலத்தில் போலீசார் வாகன சோதனை: ரூ.1½ கோடி மதிப்பிலான பான்பராக், குட்கா பறிமுதல்

Published On 2021-07-30 11:56 GMT   |   Update On 2021-07-30 11:56 GMT
சேலத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் சுமார் 1½ கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்:

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. இதை மீறி விற்பவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குட்கா பொருட்கள், புகையிலை விற்க தடை விதிக்கப்பட்ட போதும் மொத்தமாக கொள்முதல் செய்து குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். போலீசார் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்த போதும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் போதை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்யவும் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இதையடுத்து சேலம் மாநகரத்தில் போலீஸ் கமி‌ஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவின்படி தொடர்ந்து போலீசார், மாநகரத்தில் வாகன சோதனை மற்றும் கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரில் இருந்து சேலம் வழியே பல்வேறு மாவட்டங்களுக்கு பான்பராக் மற்றும் குட்கா கடத்தி செல்வதாக சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் நஜ்முல் ஹோடாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடுதலாக போலீசார் இரவு ரோந்து செல்ல அவர் உத்தரவிட்டார்.

நள்ளிரவு சேலம் டவுன் போலீஸ் உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சீலநாயக்கன்பட்டி, அன்னதானபட்டி பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது லாரி மார்க்கெட்டில் 2 லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த லாரிகளில் என்ன உள்ளது? என போலீசார் சோதனை செய்து பார்த்தனர்.

அப்போது மாட்டுத் தீவன மூட்டைகளுக்கு அடியில் பான்பராக் மற்றும் குட்கா மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் போலீசார் அதில் இருந்த 7 ஆயிரத்து 300 கிலோ பான்பராக், குட்கா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 70 ஆயிரம் ஆகும்.

இதுபோல சேலம் அம்மாபேட்டை போலீஸ் உதவி கமி‌ஷனர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் நள்ளிரவு அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு லாரியில் இருந்து மற்றொரு வேனுக்கு பார்சல் மூட்டைகள் இறக்கிக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்து சந்தேகம் அடைந்த உதவி கமி‌ஷனர் ஆனந்த குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்தபோது லாரியிலிருந்து பான்பராக், ஹான்ஸ் ஆகியவை இருந்தது. பின்னர் லாரியையும், வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் என தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த குட்கா பொருட்கள் எங்கிருந்து வாங்கி வந்தனர். யார்? யாருக்கு? இதுவரை மொத்தமாக விற்பனை செய்து உள்ளனர்? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் சுமார் 1½ கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலத்தில் ஒரே நாளில் பான்பராக், குட்கா கடத்தி வந்த 3 லாரி, ஒரு வேன் பறிமுதல் செய்த போலீசாரை போலீஸ் கமி‌ஷனர் நஜ்முல் ஹோடா பாராட்டினார்.

ஏற்கனவே கடந்த மாதம் நடத்திய சோதனையில் செவ்வாய்ப்பேட்டை பால்மார்க்கெட் பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த பரத்சிங் (வயது 32) என்பவர் நடத்தி வந்த மளிகை கடை, குடோனில் இருந்து மொத்தம் 2 டன் குட்கா கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். அவரிடம் இருந்து ரூ.33 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பரத்சிங், அவரது தம்பி தீப்சிங் (24), கடையில் வேலை பார்த்த ஓம்சிங் (27), மகுடஞ்சாவடியை சேர்ந்த மதன் (40) ஆகியோரை கைது அவர்களை போலீஸ் கமி‌ஷனர் குண்டர் சட்டத்தில் அடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News