செய்திகள்
அதிகாரிகள், போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாம் செய்த காட்சி.

பாரபட்சத்துடன் தடுப்பூசி போடப்படுவதாக பொதுமக்கள் சாலை மறியல்-அதிகாரிகளுடன் வாக்குவாதம்

Published On 2021-07-28 09:54 GMT   |   Update On 2021-07-28 10:18 GMT
எங்கள் பகுதியில் 370 பேருக்கு மட்டுமே இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூரில் தடுப்பூசி பற்றாக்குறை தொடர்ந்து நீடிப்பதாகவும் பல்வேறு இடங்களில் முறையாக தடுப்பூசி டோக்கன்கள் வழங்கப்படுவதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்காக ஒவ்வொரு முகாமிலும் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான டோக்கன்கள் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வழங்கும் நடைமுறையை மாவட்ட நிர்வாகம் கையாண்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பூர்-பல்லடம் ரோடு வித்தியாலயம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வில்லை என பொதுமக்கள் திடீரென இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் வித்தியாலயம், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். 5 ஆயிரம் பேருக்கு வாக்குரிமை உள்ளது. இந்தநிலையில் 370 பேருக்கு மட்டுமே இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முறையாக டோக்கன் வழங்காமல் பாரபட்சத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். இதுகுறித்து கேட்டால் உரிய பதில் அளிப்பதில்லை. 

அதிகாரிகள் எங்கள் பகுதியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தசம்பவத்தால் 1/2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News