செய்திகள்
அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி பரந்து விரிந்து செல்லும் தண்ணீர்.

அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி பரந்து விரிந்து செல்லும் தண்ணீர்.

Published On 2021-07-26 09:36 GMT   |   Update On 2021-07-26 09:36 GMT
அமராவதி அணையின் பிரதான நீர்வரத்து ஆறுகளான, பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மூணாறு, தலையாறு, மறையூர், காந்தலூர் மற்றும் வால்பாறை மலைத்தொடரின் கிழக்கு பகுதிகள், கொடைக்கானல் மலைத்தொடரின் மேற்கு பகுதிகளில்  தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் அமராவதி அணையின் பிரதான நீர்வரத்து ஆறுகளான, பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. கடந்த 23-ந்தேதி அணை நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில்  85 அடி வரை உயர்ந்தது.

இதையடுத்து அணை பாதுகாப்பு கருதி, அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மாலையில்  நீர்மட்டம் 87.2 அடியாக உயர்ந்ததையடுத்து அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.

நேற்று அணை முழு கொள்ளளவான 90அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 88.32 அடியாக  உள்ளது. அணைக்கு  3679 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 2,808 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
 அமராவதி அணை   நிரம்பியுள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்தநிலையில்  வாலிபர்கள் சிலர்  அத்துமீறி அணைக்குள் இறங்கி குளிக்கின்றனர். அணையில் அதிக எண்ணிக்கையில் முதலைகள் உள்ளதாலும், சேறு நிறைந்திருப்பதாலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி குளித்தவர்கள் பலர் உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

தற்போது வாலிபர்கள் சிலர் அங்கு குளித்து வருகின்றனர். எனவே அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமராவதி அணையில் ஏற்கனவே சாகுபடி பணிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தற்போது உபரிநீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டப்படி பரந்து விரிந்து செல்கிறது.

இந்த தண்ணீரை பயன்படுத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள்  தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் குடிநீர்  தேவை பூர்த்தியாகும் என்பதால்  பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News