செய்திகள்
கோப்புபடம்

சாகுபடி பணிகளை மேற்கொள்ள பயிர்க்கடன் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்

Published On 2021-07-25 07:13 GMT   |   Update On 2021-07-25 07:13 GMT
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளின் தேவைக்காக பயிர்க்கடன், நடுத்தர கால கடன், நீண்ட காலக் கடன் சீசன் சமயங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சீசனையொட்டி தொடங்கும் ஆடிப்பட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில்  மானாவாரிக்கான விதைப்பு பணி நடக்கும்.தொடர் நீர் வரத்து காரணமாக அமராவதி அணை நிரம்பியுள்ளதால் ஆயக்கட்டில் நெல் சாகுபடிக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் 30 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தொடர் மழையால் திட்ட தொகுப்பு அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திருமூர்த்தி அணையில் நீர் இருப்பு செய்யப்பட்டு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்புள்ளது. மண்டல பாசனத்துக்கு  மக்காச்சோளம், பருத்தி  உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகள் மேற்கொள்ள விவசாயிகள் தயாராக உள்ளனர்.

பருவமழையால் நீராதாரங்கள் நிரம்பி வரும் நிலையில் பயிர் சாகுபடியை தொடங்க விதை உள்ளிட்ட இடுபொருட்கள் வாங்கவும், உழவு செய்தல், பார் பிடித்தல் உள்ளிட்ட செலவினங்களுக்கும் விவசாயிகள் பயிர்க்கடனை மட்டுமே நம்பியுள்ளனர்.

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளின் தேவைக்காக பயிர்க்கடன், நடுத்தர கால கடன், நீண்ட காலக் கடன் சீசன் சமயங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். கடனோடு சாகுபடிக்கு தேவையான மானிய உரங்களும்  கூட்டுறவு சங்கத்தில் இருப்பு செய்யப்பட்டு, வினியோகிக்கப்படுவது வழக்கமாகும்.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் 56 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களில்  ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடன்  கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் அரசு அறிவிப்பின்படி தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் பெரும்பாலான தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் தள்ளுபடி பெற்ற பயனாளிகள் பட்டியல் முறையாக வெளியிடப்படவில்லை.

தள்ளுபடிக்கான சான்றிதழும் வினியோகிக்கவில்லை. இதனால் நடப்பு சீசனில்  குறித்த நேரத்தில் பயிர்க்கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து சாகுபடிகளிலும் விதை, உரம் ஆகியவற்றின் விலை அதிகரித்து ஏக்கருக்கு ரூ.15ஆயிரம் முதல் ரூ.20ஆயிரம் வரை தேவைப்படுகிறது. டீசல் விலை உயர்வு காரணமாக  டிராக்டர் உள்ளிட்ட எந்திரங்களின் வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே சாகுபடியை தொடங்க பயிர்க்கடனை மட்டுமே நம்பியுள்ளோம். ஆனால் பெரும்பாலான கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் வழங்குவதற்கான எவ்வித பணிகளும் தொடங்கப்படாமல் உள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உடனடியாக பயிர்க்கடன் வழங்க  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதேபோல் சீசனுக்கு தேவையான உரங்களையும் இருப்பு வைக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்றனர். 
Tags:    

Similar News