செய்திகள்
கோப்புபடம்

விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள்

Published On 2021-07-23 10:26 GMT   |   Update On 2021-07-23 10:26 GMT
உடுமலை வட்டாரத்தில் ஆடிப்பட்டத்தில் சாகுபடி மேற்கொள்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை:

உடுமலை பகுதியில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் ஆடிப்பட்ட சாகுபடியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். 

அதன்படி விதைப்பண்ணைகள் அமைத்து உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை உரிய ஆய்வுகளுக்குப் பிறகு சான்று அட்டை பொருத்தி விற்பனைக்குத் தயார்படுத்தியுள்ளனர். இவ்வாறு தயாரான விதைகளை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக போதிய அளவில் இருப்பு வைத்துள்ளனர். மேலும் விதை விற்பனை நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடத்தி தரமான விதைகள் சரியான விலையில் கிடைப்பதை உறுதி செய்கின்றனர்.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-

உடுமலை வட்டாரத்தில் ஆடிப்பட்டத்தில் சாகுபடி மேற்கொள்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பருவத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் உடுமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தற்போது கோ 51 ரக நெல் 10 ஆயிரத்து 500 கிலோ, ஏடிடி ஆர் 45 ரக நெல் 3 ஆயிரம் கிலோ இருப்பு உள்ளது. 

இதுதவிர வம்பன் 8 மற்றும் வம்பன் 10 ரக உளுந்து விதைகள் 2 ஆயிரத்து 25 கிலோ இருப்பு உள்ளது. மேலும் விதைப்பண்ணைகள் மூலம் ஆயிரம் கிலோ வரை விரைவில் பெறப்படவுள்ளது. அத்துடன் 2 ஆயிரத்து 630 கிலோ கொண்டைக்கடலை விதைகள், 4 ஆயிரத்து 320 கிலோ நிலக்கடலை விதைகள் இருப்பு உள்ளது. இதுதவிர 850 கிலோ கம்பு விதைகள் மற்றும் 1500 கிலோ சோளம் விதைகள் விதைப் பண்ணைகளில் இருந்து பெறப்பட்டு சான்று அட்டை பொருத்துவதற்கு தயார் நிலையில் உள்ளது.

இவை அனைத்தும் அதிகாரிகளின் நேரடி தொடர் கண்காணிப்பில் விதைப்பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தரமான விதைகளாகும். எனவே இந்த விதைகளை மானிய விலையில் பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இது தவிர தென்னை நுண்ணூட்டம், சிறுதானிய நுண்ணூட்டம், நெல் நுண்ணூட்டம் ஆகியவையும் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்றவையும் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக இருப்பில் உள்ளது. இதனை பெற்று விவசாயிகள் பயனடையலாம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Tags:    

Similar News