செய்திகள்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக கட்சிக் கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை கிடையாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2021-07-20 23:58 GMT   |   Update On 2021-07-20 23:58 GMT
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனனை சசிகலா நேரில் சென்று பார்த்தார்.
சென்னை:

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூதனன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் மதுசூதனனின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரியவந்தது. தற்போது அவர் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் டாக்டர்களின் நேரடி கட்டுப்பாட்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுசூதனன் உடல்நிலை குறித்து ஆஸ்பத்திரி வட்டாரத்தில் விசாரித்தபோது, தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.



இந்நிலையில் அ.தி.மு.க கொடியுடன் கூடிய காரில் சசிகலா  மருத்துவமனை வந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்து விட்டு வெளியே செல்லும் வரை காரில் காத்திருந்த சசிகலா, பின்னர் மருத்துவமனை சென்று  அங்கு டாக்டர்களிடம் மதுசூதனன் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டிருந்த மதுசூதனனை சந்திப்பது என்பது ஒர் ஆரோக்கியமான விஷயம்தான். அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் காரில் எப்படி அவர் அ.தி.மு.க. கொடி கட்டிச் செல்லலாம்? அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தமில்லாமல் எப்படி அ.தி.மு.க. கொடியை கட்டிக் கொண்டு செல்ல முடியும். அ.தி.மு.க. கொடி கட்டுவதற்கு சசிகலாவிற்கு எந்த உரிமையும் இல்லை.

எம்ஜிஆர் மனைவி ஜானகி விட்டுக் கொடுத்தது போல, சசிகலாவும் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுக்க வேண்டும். அ.தி.மு.க. ஜானகி - ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜானகி அம்மாள் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி என்னால் பிரியக்கூடாது, கட்சி தொடர்ந்து இயங்க வேண்டும் என்று கூறி விலகிக் கொண்டார். அதேபோல அ.தி.மு.க. இணைப்பிற்காக சசிகலா தடையாக இருக்கக் கூடாது. உதயநிதி ஸ்டாலின் படத்தை தலைமை செயலகத்தில் வைக்கக் கூடாது என தெரிவித்தார்.
Tags:    

Similar News