செய்திகள்
கோப்புபடம்

தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விடிய விடிய மழை - வீட்டுச் சுவர் இடிந்து தொழிலாளி பலி

Published On 2021-07-18 08:36 GMT   |   Update On 2021-07-18 08:36 GMT
வீட்டுச் சுவர் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் ராயக்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தகடூர்:

தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பென்னாகரம், ஒகேனக்கல், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தொப்பூர், நல்லம்பள்ளி, இண்டூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இதில் அதிகபட்சமாக மாரண்டஹள்ளியில் 91 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தருமபுரி மாவட்டம் முழுவதும்நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையோரங்களில் மழை நீர் தேங்கி கிடந்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலையிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது. வானம் மேகமூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 171 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 24.43 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், காவேரிப்பட்டினம், ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, சூளகிரி, ஊத்தங்கரை, கல்லாவி, மத்தூர், பர்கூர், குருபரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை நல்ல மழை பெய்தது.

இந்த மழை இரவும் நீடித்தது. இன்று காலையிலும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ராமர் கோவில் பகுதியை சேர்ந்தவர் தவமணி (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு தேவயானி என்ற மனைவியும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு தேவயானி தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் தவமணி தனது ஓட்டு வீட்டில் இரவு படுத்து தூங்கினார். அப்போது விடிய விடிய பெய்த மழையினால் வீட்டு சுவர் சேதமாகி இருந்தது.

இன்று அதிகாலையில் வீட்டில் தூங்கிய தவமணி மீது வீட்டுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாட்டில் சிக்கி தவமணி தூக்கத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இன்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வீட்டுச் சுவர் இடிந்து கிடப்பதையும் தவமணி பலியாகி கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பலியான தவமணி உடலை மீட்டு ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கிருஷ்ணகிரி-40.20

போச்சம்பள்ளி- 16.20

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 308 20 மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 25 68 மழை பதிவாகி உள்ளது. 

Tags:    

Similar News