செய்திகள்
சிவசங்கர் பாபா

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் 5 பேர் தப்பி ஓட்டம்

Update: 2021-07-17 06:39 GMT
சிவசங்கர் பாபாவின் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியைகள் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. ஆசிரியைகள் சிலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
சென்னை:

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தனர்.

இதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் டி.எஸ்.பி. குணவர்மன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகள் அவர் மீது பாய்ந்துள்ளது. இதனால் சிவசங்கர் பாபா உடனடியாக வெளியில் வர முடியாத நிலையில் உள்ளார்.

சிவசங்கர் பாபாவின் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியைகள் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஆசிரியைகள் சிலர் சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கேளம்பாக்கம் பழனிகார்டன் பகுதியில் உள்ள 5 ஆசிரியைகளுக்கு நேரில் சம்மன் கொடுக்க போலீசார் முடிவு செய்தனர்.

இதன்படி நேற்று மதியம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 ஆசிரியைகளின் வீட்டுக்கு நேரில் சென்றனர். அங்கு 5 ஆசிரியைகளும் இல்லை. அவர்கள் தப்பி ஓடி தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஆசிரியைகளின் வீட்டு வாசலில் சம்மனை போலீசார் ஒட்டினர்.

தப்பி ஓடிய ஆசிரியைகள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. 5 ஆசிரியைகளும் சிவசங்கர் பாபா குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

எந்த அடிப்படையில் இதுபோன்ற கருத்துக்களை நீங்கள் தெரிவித்தீர்கள் என்பது பற்றி விசாரணை நடத்துவதற்காகவே போலீசார் சம்மனை வழங்க நேரில் சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை.

இருப்பினும் 5 பேரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

வருகிற திங்கட்கிழமை முதல் 5 ஆசிரியைகளையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு இருந்தனர். இதுபோன்ற ஒரு சூழலில் தான் ஆசிரியைகள் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ள னர்.

இதைத் தொடர்ந்து 5 ஆசிரியைகள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக போலீசார் ரகசிய விசா ரணையில் இறங்கி உள்ளனர்.

சிவசங்கர் பாபா பற்றி 5 ஆசிரியைகளும் அவர் நல்லவர் என்பது உள்பட பல கருத்துக்களை கூறி இருக்கிறார்கள். எந்த அடிப்படையில் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்தீர்கள் என்பது பற்றி விசாரிப்பதற்காக சி.பி.சி.ஐ.டி போலீசார் கேள்விகளை தயார்படுத்தி வைத்துள்ளனர். ஆசிரியைகள் 5 பேரும் பிடிபடும் பட்சத்தில் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


Tags:    

Similar News