செய்திகள்
கைது

மதுரை அருகே வாகனங்களை மறித்து கைவரிசை காட்டிய 4 கொள்ளையர்கள் கைது

Published On 2021-07-16 09:51 GMT   |   Update On 2021-07-16 09:51 GMT
மதுரை அருகே வாகனங்களை மறித்து கைவரிசை காட்டிய 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி, சமயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் தனியாக செல்லும் வாகன ஓட்டிகளை மடக்கி கத்தி முனையில் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடை பெற்று வந்தது.

இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டன. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் வழிப்பறி கும்பலை மடக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நேற்று நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் போலீசாரை கண்டதும் வந்த வழியில் அசுரவேகத்தில் திரும்பி சென்றனர்.

அப்போது போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக போலீசாரும் மோட்டார் சைக்கிளில் அந்த மர்ம நபர்களை பின் தொடர்ந்து விரட்டினர்.

சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சினிமா பாணியில் துரத்தி சென்று 4 வாலிபர்களை போலீசார் மடக்கினர்.பின்னர் அவர்களை நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த பரதன், விக்னேஸ்வரன், வீரமணி, நாகராஜ் என்பது தெரிய வந்தது.

இவர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் தனியாக வரும் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்தது.

கைதான 4 பேரும் இதுவரை எத்தனை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறித்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வழிப்பறி செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகள் தொடர்பாகவும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் மடக்கிய சம்பவம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News