செய்திகள்
சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

பொது இடங்களில் ஒட்டப்பட்ட 45 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றம்

Published On 2021-07-14 03:50 GMT   |   Update On 2021-07-14 03:50 GMT
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

சென்னையை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல் உள்ளிட்ட அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் குறிப்பாக அரசு சுவர்கள், பாலங்கள், தூண்கள் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சென்னையில் 44 ஆயிரத்து 981 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக வளசரவாக்கம் மண்டலத்தில் 12 ஆயிரத்து 274 சுவரொட்டிகளும், பெருங்குடியில் 5 ஆயிரத்து 497 சுவரொட்டிகளும், குறைந்தபட்சமாக மணலியில் 481 சுவரொட்டிகளும் அகற்றப்பட்டுள்ளது.

அந்தவகையில் தென் சென்னையில் 27 ஆயிரத்து 920 சுவரொட்டிகள், மத்திய சென்னையில் 8 ஆயிரத்து 908 சுவரொட்டிகள், வட சென்னையில் 8 ஆயிரத்து 153 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், சென்னையின் அழகை சீர்குலைக்கும் வகையில், சுவரொட்டிகள் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News