செய்திகள்
அண்ணாமலை

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை 16-ந்தேதி பதவி ஏற்கிறார்

Published On 2021-07-14 02:45 GMT   |   Update On 2021-07-14 02:45 GMT
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பதவி ஏற்பு நிகழ்ச்சி வருகிற 16-ந்தேதி சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறுகிறது.
சென்னை:

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மந்திரி சபை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த எல்.முருகனும் இடம்பெற்றார். எல்.முருகன் மத்திய மந்திரியாக பொறுப்பேற்றதை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவராக கே.அண்ணாமலையை நியமனம் செய்து பா.ஜ.க. தலைமை அறிவித்தது.

இந்தநிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பதவி ஏற்பு நிகழ்ச்சி வருகிற 16-ந்தேதி சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக பா.ஜ.க. தலைவராக கே.அண்ணாமலை, வருகிற 16-ந்தேதி கமலாலயத்தில் பதவியேற்க இருக்கிறார். இதற்காக கோவையில் இருந்து புறப்பட்டு பல்வேறு மாவட்டங்கள் வழியாக (சாலை மார்க்கமாக) சென்னை வரும் அவருக்கு ஆங்காங்கே சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதன்படி 14-ந்தேதி (இன்று) காலை 9.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பல்லடம், திருப்பூர், பெருந்துறை, ஈரோடு, சங்ககிரி, சேலம், நாமக்கல், பரமத்தில் வேலூர், கரூர், குளித்தலை வழியாக திருச்சி வந்தடைகிறார். 15-ந்தேதி (நாளை) காலை திருச்சி, பெரம்பலூர், தொழுதூர் சந்திப்பு, வேப்பூர் சந்திப்பு, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம் வந்தடைகிறார்.

16-ந்தேதி பகல் 12 மணிக்கு தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், சைதாப்பேட்டை வழியாக சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்துக்கு வருகிறார். பிற்பகல் 1.45 மணிக்கு கமலாலயத்தில் பூரண கும்ப மரியாதையுடன் அண்ணாமலைக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இதில் மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநில தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் பங்கேற்கிறார்கள். பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள், மாநில-மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொள்கிறார்கள்.


Tags:    

Similar News