செய்திகள்
கோப்புபடம்

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை

Published On 2021-07-07 14:44 GMT   |   Update On 2021-07-07 14:44 GMT
ஊரடங்கையொட்டி 55 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடை திறக்கப்பட்ட நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
சேலம்:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தன. வைரஸ் தாக்கம் குறைந்த 27 மாவட்டங்களில் மட்டும் கடந்த மாதம் 28-ந் தேதி மதுபான கடைகள் திறக்கப்பட்டன.

பாதிப்பு அதிகம் இருந்த சேலம், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் மதுப்பிரியர்கள் பக்கத்துக்கு மாவட்டங்களுக்கு படையெடுத்தனர்.

தற்போது சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உள்ளது. இதையடுத்து தமிழக அரசு ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவித்தது. இதைத்தொடர்ந்து சேலத்தில் நேற்று முன்தினம் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.

நீண்ட நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதும் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படவில்லை. அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்து வந்தும் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

இது குறித்து சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அம்பாயிரநாதன் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.4 கோடி வரை மதுபானம் விற்பனை நடைபெறும். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ரூ.10 கோடி வரை விற்பனை நடைபெறும்.

ஊரடங்கையொட்டி 55 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடை திறக்கப்பட்ட நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News