செய்திகள்
கேஎஸ் அழகிரி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தொடர் போராட்டம் - தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

Published On 2021-07-02 21:19 GMT   |   Update On 2021-07-02 21:19 GMT
தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை:

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை வகித்துப் பேசினார். அதன்பின், கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக காங்கிரஸ் கட்சி வரும் 8-ம் தேதி முதல் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்த இருக்கிறது.



முதல் கட்டமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு முன்பாக அந்தப் போராட்டங்களை நடத்தி அங்கு வருபவர்களிடம் கையெழுத்து வாங்குகிற இயக்கம் வரும் 8-ம் தேதி நடத்தப்படும். 

2வது கட்ட போராட்டம், ஒவ்வொரு தொகுதி தலைநகரங்களிலும் வரும் 12-ம் தேதி சைக்கிள் பேரணி நடத்தப்படும். 

மூன்றாவது கட்ட போராட்டம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசின் தவறான கொள்கைகள், எரிபொருள் விலை உயர்வினால் ஏற்பட்ட பணவீக்கம் உள்ளிட்ட மோடி அரசின் நடவடிக்கைகளை கண்டித்து காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி சென்னையில் ஒரு பேரணியை நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.
Tags:    

Similar News