செய்திகள்
உச்ச நீதிமன்றம்

10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Published On 2021-07-02 09:48 GMT   |   Update On 2021-07-02 09:48 GMT
இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான நாகமுத்து ஆஜராகி வாதாடினார்.
புதுடெல்லி:

தமிழகத்தில் வன்னியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சந்தீப் குமார், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் ஆகிய இருவர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான நாகமுத்து, “இந்த விவகாரம் மிகவும் முக்கியமான விவகாரம். இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குடன் இதையும் விசாரிக்க வேண்டும். 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். 

ஆனால், இடைக்காலத் தடை விதிப்பதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே மதுரையைச் சேர்ந்த அபிஷ்குமார் தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து இந்த மனு விசாரிக்கப்படும் என கூறினர். மேலும், இந்த மனு மீது தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News