செய்திகள்
தடுப்பூசி போட காத்திருந்த மக்கள்

3 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது

Published On 2021-07-02 07:53 GMT   |   Update On 2021-07-02 07:53 GMT
மத்திய அரசிடம் கூடுதலாக தடுப்பூசிகளாக விநியோகிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
சென்னை:

கொரோனா 2-வது அலைக்கு பின்னர் தமிழகத்தில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரையில் சுமார் 1.5 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.

பொதுமக்கள் மையங்களுக்கு சென்று காத்து நின்றனர். கையிருப்பில் இருந்த குறைந்த அளவு தடுப்பூசிகளும் போடப்பட்டதால் பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக ஏமாற்றம் அடைந்தனர். சென்னையிலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. ஆன்லைன் முன்பதிவும் செய்யப்படவில்லை.

மத்திய அரசிடம் கூடுதலாக தடுப்பூசிகளாக விநியோகிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அந்த அடிப்படையில் நேற்று 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேயில் இருந்து சென்னைக்கு வந்தன. 6 லட்சம் தடுப்பூசிகள் மாநில அரசுக்கும் 4 லட்சம் தடுப்பூசிகள் மத்திய கிடங்கிற்கும் வந்து சேர்ந்தன.

இதையடுத்து மாநில கிடங்கில் இருந்து இரவோடு இரவாக அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டது. இன்று காலைக்குள் பெரும்பாலான மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் சென்றடைந்தன.

இதனையடுத்து இன்று மீண்டும் தடுப்பூசி போடும் பணி அனைத்து மையங்களிலும் தொடங்கியது. பொதுமக்கள் காலையிலேயே முகாம்களில் காத்திருந்தனர்.

ஒருசில மையங்களில் மதியம் 12 மணியளவில் தடுப்பூசி போடப்பட்டன. அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்ட தடுப்பூசிகள் 2 நாட்களுக்குள் தீர்ந்துவிடும். இதனால் முதியவர்கள் மட்டுமின்றி இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் தற்போது தடுப்பூசி போட ஆர்வமாக உள்ளனர்.

மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் அதிகளவு தடுப்பூசி போட முன்வருகிறார்கள்.

சென்னையில் 64 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்ற மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பின்னர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த முறை கையாளப்படுகிறது.

மாநகராட்சி இணைய தளம் வழியாக முன்பதிவு செய்வது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதனையும் எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். வெப்சைட் வழியாக பதிவு செய்து குறித்த நேரத்தில் மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
Tags:    

Similar News