செய்திகள்
காரிப்பட்டியில், தடுப்பூசி போட்டுக் கொள்ள இன்று அதிகாலை நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு- காரிப்பட்டியில் நீண்ட வரிசையில் விடிய விடிய காத்திருந்த பொதுமக்கள்

Published On 2021-06-25 10:00 GMT   |   Update On 2021-06-25 10:00 GMT
காரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டோக்கன் பெற்று தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, நள்ளிரவிலேயே நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து, நீண்ட வரிசையில் விடிய விடிய காத்திருந்தனர்.
வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர், காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் பகுதியில் கொரோனா 2-ம் அலை பரவல் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள, வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வாழப்பாடி பகுதியில் பேளூர், திருமனூர் மற்றும் காரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2 நாட்களுக்கு ஒரு முறை 200 முதல் 300 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் முறையில் தடுப்பூசி போடப்படுவதால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு செல்வோருக்கு டோக்கன் கிடைக்காததால் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், தடுப்பூசி டோக்கன் பெறுவதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

காரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டோக்கன் பெற்று தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, நள்ளிரவிலேயே நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து, நீண்ட வரிசையில் விடிய விடிய காத்திருந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், முன்கூட்டியே வந்து காத்திருந்தால் தான் டோக்கன் கிடைக்கிறது. எனவே தான், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக நள்ளிரவிலேயே வந்து, காரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக நீண்ட வரிசையில் விடிய விடிய காத்திருக்கிறோம்.

மருத்துவ பணியாளர்கள் வந்ததும், டோக்கன் பெற்று ஊசியை போட்டுக் கொள்கிறோம். எனவே, கொரோனா தடுப்பூசி வழங்குவதை அதிகரிக்கவேண்டும். தட்டுப்பாடின்றி அனைத்து பொது மக்களுக்கும் தினந்தோறும் தடுப்பூசி போடுவதற்கு, சேலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தற்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. அனைத்து கிராமங்களிலும் உள்ள துணை சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடுவதற்கு உண்டான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
Tags:    

Similar News