செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

தேர்தல் நேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதை நான் அலட்சியம் செய்யவில்லை - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Published On 2021-06-24 11:18 GMT   |   Update On 2021-06-24 11:18 GMT
பிப்ரவரி 26-ந் தேதி முதல் மே 6 வரை நடைபெற்ற ஆட்சியை அ.தி.மு.க. மறந்துவிட்டதா? நடுவில் சில பக்கத்தை காணோம் என்ற சினிமா படம் கூட உண்டு. அதுபோல் உள்ளது.

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று மு.க.ஸ்டாலின் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார்.

அப்போது, “தேர்தல் நேரததில் கொரோனா பரவல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. இந்த காலக்கட்டத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சராக இருந்தார். 26-2-2021-க்கு பிறகு அன்றைய முதல்-அமைச்சர் எந்த அரசு பணியையும் பார்க்கவில்லையா? 12.4.21 அன்று கோட்டையில் அப்போதைய முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

எனவே கொரோனாவை அ.தி.மு.க. கட்டுப்படுத்தி விட்டது என்பது தவறான வாதம்.

பிப்ரவரி 26-ந் தேதி முதல் மே 6 வரை நடைபெற்ற ஆட்சியை அ.தி.மு.க. மறந்துவிட்டதா? நடுவில் சில பக்கத்தை காணோம் என்ற சினிமா படம் கூட உண்டு. அதுபோல் உள்ளது.

எனவே தி.மு.க. ஆட்சி வந்ததும் கொரோனாவை திறமையாக கட்டுப்படுத்தியது தான் எங்கள் சாதனை” என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் இங்கு பேசும்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஓட்டு எண்ணும்வரை நான்தான் முதல்-அமைச்சர் என்று குறிப்பிட்டார். அது உண்மைதான். ஆனால் தேர்தல் விதிமுறை அப்போது அமலில் இருந்தது.

கொரோனா தொற்று அதிகரித்தபோது அது தொடர்பான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் என்று தலைமை செயலாளர் கூறினார். அதன்படி கடிதம் எழுதினோம்.

இதையடுத்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் இருந்து தலைமை செயலாளருக்கு கடிதம் வந்தது. வாக்குப்பதிவு முடிந்தபிறகும், தேர்தல் நடைமுறை தொடர்ந்ததால், தேர்தல் கமி‌ஷனிடம் சொல்லிவிட்டு, எல்லா ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தினோம்.

எதிலும் நாங்கள் அலட்சியத்தோடு இருக்கவில்லை. ஒரு தனியார் நிறுவனம் இலவசமாக ஆக்சிஜன் தயாரித்து தருவதாக கூறியது. அப்போதும், அனைத்து கட்சிகளின் கருத்தையும் கேட்டுதான் செயல்பட்டோம்.

மே 2-ந் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறை இருந்தாலும், கொரோனாவை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுத்தோம். முகக்கவசம் தேவை இல்லை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தான் கூறி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-


26.2.21 அன்று தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. ஆனால் 9.4.21 அன்றுதான் தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இடைப்பட்ட 40 நாட்கள் என்ன செய்தார்கள். 9-ந் தேதி எழுதிய கடிதத்துக்கு 10-ந் தேதியே தேர்தல் கமி‌ஷனில் இருந்து பதில் வந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News