செய்திகள்
தேக்கமடைந்துள்ள காடா துணிகள்.

ஊரடங்கால் ரூ.600 கோடி காடா துணிகள் தேக்கம்

Published On 2021-06-20 08:52 GMT   |   Update On 2021-06-20 08:52 GMT
கொரோனா ஊரடங்கால் 80 சதவீத தொழில் முடங்கி விட்டது. ஏற்றுமதி சம்பந்தப்பட்ட 20 சதவீத உற்பத்தியாளர்கள் மட்டுமே தற்போது விசைத்தறிகளை இயக்கி வருகின்றனர்.
பல்லடம்:
 
திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள், இயங்கிவருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா ஜவுளி துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா ஜவுளித்தொழிலில் நேரடியாக 1 லட்சம் பேரும் மறைமுகமாக 4 லட்சம் பேரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட விசைத்தறிதொழில் மெல்ல இயல்பு நிலைக்கு வரத்துவங்கிய நிலையில் தற்போது கொரோனா தொற்று 2-வது அலையினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் விசைத்தறிகளை இயக்க முடியாமலும், உற்பத்தி செய்த துணிகளை அனுப்ப முடியாமலும் உள்ளதால் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான காடா ஜவுளி துணிகள் தேக்கம் அடைந்துள்ளன.

உற்பத்தி செய்து அனுப்பிய துணிகளுக்கு வடமாநில வியாபாரிகளிடமிருந்து சுமார் ரூ.1500 கோடி பாக்கித்தொகை வசூல் ஆகாததால் காடா ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்படைந்து உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:-

திருப்பூர்,  கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக உள்ள விசைத்தறி ஜவுளித்தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த ஜவுளித்துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால்  நெருக்கடியை சந்தித்து வந்தது.

இதனிடையே கடந்த ஆண்டு கொரோனா வைரஸ்  ஊரடங்கால் முற்றிலும் முடங்கியது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் தளர்வுகள் அறிவிப்பால் சற்றே விசைத்தறி தொழில் சூடுபிடித்து இயங்கிய வேளையில் கொரோனாவின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது .

இதனால் தமிழகத்தில் இருந்து ஜவுளிகள் அதிகமாக ஏற்றுமதியாகும் குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வடமாநில ஜவுளி வியாபாரிகள் ஏற்கனவே ஆர்டர் கொடுத்து தயார் நிலையில் உள்ள காடா துணிகளை அனுப்ப வேண்டாம் என்றும், புதிய ஆர்டர்களை  நிறுத்தி வைத்தும், ஏற்கனவே ஆர்டர் கொடுத்து பெற்ற துணிகளுக்கு, இதுவரை பணம் அனுப்பாமலும் உள்ளனர். இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

தற்போது கொரோனா ஊரடங்கால் 80 சதவீத தொழில் முடங்கி விட்டது .ஏற்றுமதி சம்பந்தப்பட்ட 20 சதவீத உற்பத்தியாளர்கள் மட்டுமே தற்பொழுது விசைத்தறிகளை இயக்கி வருகின்றனர். இதனால் சுமார் ரூ.600 கோடி காடா துணிகள் தேக்கமடைந்துள்ளது விசைத்தறிகள் இயங்காததால் இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ள சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 

எனவே மத்திய,மாநில அரசுகள் ஜவுளித்தொழில் சீராகும் வரை கழிவுப்பஞ்சு ஏற்றுமதியை அரசு தடை செய்ய வேண்டும், நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.

ஜவுளி உற்பத்தியாளர்கள் பெற்றுள்ள கடன்களுக்கு தவணை செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும். மூன்று மாத கால வட்டி தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் வட மாநிலத்தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அவர்கள் திரும்பி வந்த பின்புதான் இந்த ஜவுளித் தொழில் இயல்பு நிலைக்கு திரும்பும். அவர்களை அழைத்துவர அரசு “சிறப்பு ரெயில்” அனுமதித்தால் கட்டணம் செலுத்தி அவர்களை அழைத்து வர தயாராக உள்ளோம்.

மேலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதால் ஏராளமான தொழிலாளர்கள் தடுப்பூசி போடவில்லை. இதனால் பலர் வேலைக்கு வர தயங்குகின்றனர். 

அரசு சலுகை விலையில் தடுப்பூசி கொடுத்தால் விலை கொடுத்து வாங்கி தொழிலாளர்களுக்கு செலுத்த தயாராக உள்ளோம். எனவே மத்திய, மாநில அரசுகள் கொரோனா ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள விசைத்தறி ஜவுளி தொழிலை சலுகைகள் அளித்து காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News