செய்திகள்
மின்சார ரெயில்

சென்னையில் மின்சார ரெயில்களை கூடுதலாக இயக்க முடிவு

Published On 2021-06-19 06:19 GMT   |   Update On 2021-06-19 06:19 GMT
புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்கு வந்து செல்ல வசதியாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக ரெயில்களை இயக்கவும் மற்ற நேரங்களில் குறைந்த அளவில் ரெயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை:

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு படிப்படியாக தளர்வு செய்யப்படுகிறது.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் மேலும் சில தளர்வுகள் நடைமுறைப்படுத்த இருப்பதால் பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி வெளியில் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

பொது போக்குவரத்து மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ரத்து செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் விடப்பட்டுள்ளன.

அதே போல மின்சார ரெயில்களும் கூடுதலாக விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. தற்போது முன்கள பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியில் ஈடுபடக்கூடிய ஊழியர்களுக்காக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த மாதம் 200 ரெயில் சேவை இருந்த நிலையில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 382 சேவைகள் இயக்கப்படுகின்றன. திங்கட்கிழமை முதல் மேலும் சேவையை அதிகரிக்க சென்னை கோட்டம் முடிவு செய்துள்ளது.

கூடுதலாக 100 மின்சார ரெயில்கள் வரை இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. கடைகள், தொழில் நிறுவனங்கள், அரசு துறைகள் கூடுதல் ஊழியர்களுடன் பணிபுரியும் வகையில் தளர்வு செய்யக்கூடும் என்பதால் மின்சார ரெயில் சேவையும் அதிகரிக்கப்படுகிறது.


புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்கு வந்து செல்ல வசதியாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக ரெயில்களை இயக்கவும் மற்ற நேரங்களில் குறைந்த அளவில் ரெயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர்கள், பெண்கள் பணிக்கு வந்து செல்வதற்கு அனுமதிக்கப்படும். ரெயில் பயணத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் அரசு, தனியார் ஊழியர்கள் பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும் மற்ற நேரங்களில் பொதுமக்கள் செல்வதற்கு வழிவகை செய்யப்படும் என்றும் தெரிகிறது.

கொரோனா 2-வது அலை ஊரடங்கிற்கு முன்பு வரை 600 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. தற்போது அது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தளர்வு அறிவிக்கும் பட்சத்தில் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும்.

ஊரடங்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டால் ரெயில்களும் முழுமையாக இயக்க வாய்ப்பு உள்ளது.

இதே போல மெட்ரோ ரெயில் சேவையும் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்து வருகிறது. உள்நாட்டு விமான சேவை நடைபெறுவதாலும், தொழில் நிறுவனங்கள் திறக்கப்படுவதாலும் ஊழியர்கள் செல்வதற்கு வசதியாக மெட்ரோ ரெயில்களை இயக்கவும் தயார்படுத்தப்பட்டு உள்ளது.

அரசின் அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் பொதுமக்கள் வசதிக்காக மெட்ரோ ரெயிலை இயக்க அனுமதி அளித்தால் சேவையை தொடங்க தயாராக இருக்கிறோம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News