செய்திகள்
முக ஸ்டாலின்

ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published On 2021-06-19 06:03 GMT   |   Update On 2021-06-19 07:57 GMT
11 மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களிலும் பல்வேறு தளர்வுகளுடன் 14ந்தேதியில் இருந்து 21ந்தேதிவரை 4-வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சென்னை:

தமிழகத்தில் கடந்த மே 7-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் ஏறுமுகமாக இருந்தது. ஒருகட்டத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 36 ஆயிரத்தை தொட்டது.

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந்தேதியில் இருந்து 31-ந்தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.

இந்த காலகட்டத்தில் தொற்று சற்று குறைந்து முன்னேற்றம் காணப்பட்டது. எனவே தொற்றின் சங்கிலித்தொடரை அறுப்பதற்காக மீண்டும் ஒரு வாரம், அதாவது மே 31-ந்தேதியில் இருந்து ஜூன் 7-ந்தேதிவரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டது.

இந்த 2 முழு ஊரடங்கில் நல்ல பலன் கிடைத்ததைத் தொடர்ந்து 3-ம் முறையாக சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவு 7-ந்தேதியில் இருந்து 14-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்தது.


ஆனால் கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் தொற்று எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.

எனவே அந்த 11 மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களிலும் பல்வேறு தளர்வுகளுடன் 14-ந்தேதியில் இருந்து 21-ந்தேதிவரை 4-வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 21-ந்தேதியுடன் 4-வது ஊரடங்கு முடிவடைகிறது. கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை தற்போது 8 ஆயிரத்து 633 என்ற அளவில் குறைந்துள்ளது. 11 மாவட்டங்களில் கோவை, ஈரோடு தவிர மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்துவிட்டது.



இந்த நிலையில் 5-வது முறையாக ஊரடங்கு உத்தரவை 28-ந்தேதிவரை நீட்டிப்பது தொடர்பாகவும், எந்தெந்த மாவட்டங்களுக்கு கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது தொடர்பாகவும் இன்று தலைமைச்செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Tags:    

Similar News