செய்திகள்
சிங்கம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று

Published On 2021-06-19 02:51 GMT   |   Update On 2021-06-19 02:51 GMT
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்தது.
வண்டலூர்:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த மே மாதம் 26-ந்தேதி மிகவும் சோர்வாக காணப்பட்ட 11 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் தொற்றால் உயிரிழந்தது. மேலும் ராகவ் என்ற 19 வயதுடைய ஆண் சிங்கத்திற்கு மட்டும் கொரோனா கோவிட்-2 டிஸ்டெம்பர் என்ற புதிய வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பத்மநாதன் என்ற 12 வயது ஆண் சிங்கம் சிகிச்சை பலனின்றி கடந்த 16-ந்தேதி உயிரிழந்தது. தொற்றால் பாதிக்கப்பட்ட 8 சிங்கங்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த நிலையில் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு தொற்று ஏற்படுத்திய சார்ஸ் கோவிட்-2 வைரசின் மரபணு வரிசைப்படுத்துதலின் முடிவுகளை பகிர்ந்து கொள்ளுமாறு உயிரியல் பூங்கா அதிகாரிகள் போபாலில் உள்ள என்.ஐ.எஸ்.எச்.எ.டி. நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

என்.ஐ.எஸ்.எச்.எ.டி. நிறுவனம் என்பது நம்நாட்டில் விலங்குகளில் புதிதாக உருவாகும் நோய் கிருமிகளை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நிறுவனமாகும். மேலும் சார்ஸ் கோவிட்-2க்கான பூங்கா விலங்கு மாதிரிகளை பரிசோதிக்க நம் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 4 நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்த சூழலில் இயக்குனர் (ஐ.சி.எ.ஆர்- என்.ஐ.எஸ்.எச்.எ.டி.) இப்போது பின்வருமாறு தனது முடிவை அறிவித்துள்ளார்.

4 சிங்க மாதிரிகளின் மரபணு வரிசைப்படுத்தல் ஆய்வு போபாலில் உள்ள (என்.ஐ.எஸ்.எச்.எ.டி.), நிறுவனத்தில் செய்யப்பட்டது. மரபணு வரிசைப்படுத்துதல் பகுப்பாய்வில் 4 சிங்கங்களின் மாதிரிகள் பாங்கோலின் பரம்பரை பி.1.617.2 வகையை சேர்ந்தவை என்பதையும் அவை உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தப்பட்ட படி டெல்டா வகையை சேர்ந்தது என்றும் கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பு பி.1.617.2 மரபணு பரம்பரையை வரிசைப்படுத்துதலில் இது மாறுபட்ட (வி.ஒ.சி.) வகையாக கூறி வகைப்படுத்தியுள்ளது. இந்த வகை வேகமாக பரவும் தன்மை கொண்டதோடு நடுநிலைத்தன்மைக்கு குறைவானது எனவும் கூறியுள்ளது.

இந்த தகவலை வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News