செய்திகள்
ராமதாஸ்

சீன செயலிகளை தடை செய்ய வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

Published On 2021-06-18 08:10 GMT   |   Update On 2021-06-18 08:10 GMT
சீன செயலிகளில் முதலீடு செய்பவர்கள் பணத்தை இழப்பது தடுக்கப்படாவிட்டால், பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் ஏற்படும்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டு மக்களின் வறுமை மற்றும் நிதி நெருக்கடியை பயன்படுத்தி கடன் கொடுத்து ஏமாற்றிய சீன நிறுவனங்கள், இப்போது அதிக லாபம் தருவதாகக் கூறி ஏமாற்றத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே சீன நிறுவனங்களிடம் ஏராளமானோர் ஏமாந்துள்ள நிலையில், மற்றவர்களும் சீன நிறுவனங்களின் சதி வலையில் சிக்கி ஏமாறுவதைத் தடுக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களை ஏமாற்றுவதையே பிழைப்பாகக் கொண்ட நிறுவனங்கள் புதுப்புது வடிவங்களில் மக்களை ஏமாற்றி வருகின்றன. அந்த வகையில் சில சீன நிறுவனங்கள், இந்தியாவில் நிழல் நிறுவனங்களைத் தொடங்கி, அதன் செயலிகள் மூலம் முதலீடுகளுக்கு அதிக லாபம் தருவதாக ஆசைகாட்டி ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ரூ.5,000 கடன் வாங்கிய பலரும் கூட தற்கொலை செய்து கொண்ட அவலம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. அதை நான் தான் அம்பலத்துக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினேன். அதன்பிறகு தான் சீனத்தைச் சேர்ந்த சிலரும், அவர்களுக்கு உதவியாக இருந்த இந்தியர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் தான் கந்துவட்டி செயலிகளிடம் சிக்கி பொதுமக்கள் தற்கொலை செய்து கொள்வது முடிவுக்கு வந்தது.

இப்போதும் கூட சீன செயலிகளில் முதலீடு செய்பவர்கள் பணத்தை இழப்பது தடுக்கப்படாவிட்டால், பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் ஏற்படும். அதற்கு முன்பாக தமிழக அரசும், காவல்துறையும் அதிரடி நடவடிக்கை எடுத்து மக்களையும், அவர்களின் பணத்தையும் காப்பாற்ற வேண்டும். சீன செயலிகளில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறுவது சாத்தியமற்ற செயலாகும்.

மக்களின் பணத்தை ஆசை காட்டி பறித்து ஏமாற்றும் சீன நிறுவனங்களின் செயலிகளை தடை செய்வது மட்டும் தான் இதற்கு ஒரே தீர்வாகும். அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நிறைவடையும் வரை, சீன செயலிகளிடம் ஏமாறாமல் இருப்பதற்காக மக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எனவே, முதலீடு செய்த தொகையை விட இரு மடங்கு லாபம் தருவதாகக் கூறி ஏமாற்றும் சீன செயலிகளில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அனைத்து ஊடகங்கள் மூலமாகவும் தமிழக மக்களுக்கு அரசும், காவல்துறையும் அறிவுறுத்த வேண்டும். சீன செயலிகளை இயக்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் மோசடிக்கு துணையாக இருப்பவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்; மோசடி செய்யும் சீன செயலிகளையும், நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News