செய்திகள்
தடுப்பூசி

பெயர் பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை

Published On 2021-06-17 09:11 GMT   |   Update On 2021-06-17 09:11 GMT
தடுப்பூசிகள் போடும் விபரம் தங்களுக்கு தெரிவதில்லை என்றும், பல்வேறு பிரச்சினைகள் உள்ளது என்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
உடுமலை:

உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் எரிசனம்பட்டி, செல்லப்பம்பாளையம், அமராவதி நகர், பெரியவாளவாடி ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒதுக்கப்படும் தடுப்பூசிகள் போடும் விபரம் தங்களுக்கு தெரிவதில்லை என்றும் இதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது என்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை முறைபடுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. 

கூட்டத்திற்கு மகளிர் திட்டம் திருப்பூர் உதவி திட்ட அலுவலர் நாகராஜன் தலைமை தாங்கினார். உடுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எரிசனம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினசரி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை ஆதார் அட்டையின் 2 நகல்கள், 2 தொலைபேசி எண்கள் ஆகியவற்றை சமர்ப்பித்து பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். 

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்து வரப்பெறும் தடுப்பூசி எண்ணிக்கை அடிப்படையில், பெயர்பதிவு செய்தவர்களுக்கு சுகாதார துறையில் இருந்து தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வரிசைப்படி முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News