செய்திகள்
கோப்புபடம்

கோவையில் மதுக்கடைகள் அடைப்பு - 128 கி.மீ தூரம் பயணித்து திண்டுக்கல்லுக்கு செல்லும் மதுபிரியர்கள்

Published On 2021-06-16 08:07 GMT   |   Update On 2021-06-16 08:07 GMT
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மதுபிரியர்கள் அருகே உள்ள மாவட்டமான திண்டுக்கல்லுக்கு மோட்டார் சைக்கிள், கார்களில் படையெடுக்கின்றனர்.

பொள்ளாச்சி:

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தொற்று குறைந்ததை அடுத்து அரசு தளர்வுகளை அளித்து வருகிறது.

தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு வருகிற 21-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமாக உள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அறிவித்தது.

அதன்படி 27 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் அங்குள்ள மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு பிடித்த மது பாட்டில்களை வாங்கி சென்றனர். மேலும் கடைகள் திறக்கப்படாத மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அருகே உள்ள மாவட்டங்களுக்கு மதுபாட்டில்கள் வாங்க கார்கள், மோட்டார் சைக்கிளில் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர்.

கோவையில் தொற்று அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் இங்குள்ள மதுபிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இருப்பினும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மதுபிரியர்கள் அருகே உள்ள மாவட்டமான திண்டுக்கல்லுக்கு மோட்டார் சைக்கிள், கார்களில் படையெடுக்கின்றனர்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு அமலில் உள்ள நிலையில் போலீசாரை ஏமாற்றி விட்டு புதிதாக குறுக்கு வழிகளை கண்டுபிடித்து திண்டுக்கல் மாவட்ட எல்லையான சாமிநாதபுரம், ஒட்டன் சத்திரம், திண்டுக்கல்லுக்கு செல்கின்றனர்.

அங்குள்ள டாஸ்மாக் கடைகளை தேடி அலைந்து கண்டுபிடித்து நீண்ட நேரம் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி மகிழ்ச்சியுடன் ஊர் திரும்புகின்றனர்.

இதுகுறித்து மதுபிரியர்கள் கூறுகையில், ஊரடங்கை காரணம் காட்டி சிலர் மதுபானங்களை அதிக விலைக்கு விற்கிறார்கள். தற்போது மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறந்தாலும், இங்கு திறக்காதது ஏமாற்றமே.

அதனால் இங்கிருந்து திண்டுக்கல்லுக்கு சென்று வாங்குகிறோம். பொள்ளாச்சி- பழனி ரோட்டில் 45 கி.மீட்டர் பயணித்து எல்லையில் உள்ள சாமிநாதபுரம் கடைக்கு சென்றோம்.

அங்கு கூட்டம் அதிகமாக இருந்தால், வேறு கடையை தேடி அலைய வேண்டி உள்ளது. இருந்தாலும் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வரை கார், மோட்டார் சைக்கிளில் 128 கி.மீட்டர் தூரம் பயணித்து டாஸ்மாக் கடைக்கு செல்கிறோம். அந்த கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து மதுபாட்டில்கள் வாங்கி வருகிறோம். நீண்ட நேரம் காத்திருந்தாலும் நாங்கள் நினைத்து செல்லும் மது வகைகள் கிடைப்பதில்லை. இருந்தாலும் கிடைத்ததை வாங்கி கொண்டு இங்கு வருகிறோம் என்றனர்.

Tags:    

Similar News